ஹெம்மாத்தகம நீர்த் திட்டத்தின் மூலம் 60வீத மக்களின் குடிநீர்த்தேவை பூர்த்தி! அமைச்சர்கள் கருத்து

ஹெம்மாத்தகம நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60 வீத மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களை இடித்து சேதப்படுத்தினாலும், இதுபோன்ற பாரிய திட்டங்களை பெற்றுக்கொள்ளவே போராட வேண்டும் என்றும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த திட்டத்துக்காக கொண்டுவரப்பட்டிருந்த குழாய்களுக்கு சிலர் தீ வைத்திருந்தனர் எனவும் அமைச்சர் தாரக பாலசூரிய குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்துக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என அமைச்சர் கனக ஹேரத் கூறியிருந்தார்.

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கக்கூடிய வகையில், ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் தொழில்துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயங்களை அமைச்சர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அங்கு அவர்கள் தொடர்ந்து கருத்துரைக்கையில் –

நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த:

தற்போதைய ஜனாதிபதி 2018ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இந்த நீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இன்று அவர் இந்த குடிநீர் திட்டத்தை திறந்துவைக்க வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

கேகாலை மாவட்டம் நீரினால் தன்னிறைவு பெற்றுள்ள போதிலும் மாவட்டத்தில் 45 வீதமான மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று இந்த நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60 வீத மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதைக் கூற விரும்புகின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் 70 வீதம் ஆக உயர்ந்துள்ளது. அம்பாறையிலும் அப்படித்தான். போராட்டக்காரர்கள் அரச சொத்துகளை இடித்து சேதப்படுத்தினாலும், இதுபோன்ற பாரிய திட்டங்களை பெற்றுக்கொள்ளவே போராட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய:

இந்த குடிநீர் திட்டத்தால் ஏராளமான மக்கள் பயன் பெறுவர். கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் எமது அரசாங்கத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இதுபோன்ற முக்கிய திட்டங்கள் கொண்டுவரப்படும்போது, பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை இரவு இந்த திட்டத்துக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த குழாய்களுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். இதன் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் ஜனாதிபதி நாட்டின் பொறுப்பை ஏற்று, சரியான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நாட்டை வழிநடத்தினார். உங்களின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் மிகவும் முக்கியமானது. அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டமும் மிகவும் அவசியமானது என ஜனாதிபதிக்கு நான் பரிந்துரைக்கிறேன்.

ஜனாதிபதியின் புதிய பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நாடு ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்லும் என்று நான் நம்புகிறேன். – என்றார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்:

ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் கேகாலை மாவட்டத்துக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். இந்த மாபெரும் குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கவே வருகை தந்துள்ளார். இந்த மாபெரும் குடிநீர் திட்டம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அதன் பயனை இன்று மக்களுக்கு வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. யானைகள் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, கித்துல்கல ராஃப்டின் விளையாட்டு போன்றவற்றின் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்.

ஜனாதிபதி தொடர்ந்து கூறும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்துக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.