வீதியில் கிடந்த 4 லட்சம் ரூபா உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது! காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடியில் 4 லட்சம் ரூபா பணத்தை வீதியில் கண்டெடுத்த தமிழ்,முஸ்லிம் சகோதரர்கள் காத்தான்குடி பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த றிஸ்வி என்பவரின் 4 லட்சம் ரூபா பணம் நேற்று (திங்கட்கிழமை) காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் வீதியில் வைத்து காணாமல்போயுள்ளது.

சீனியை கொள்முதல் செய்வதற்காக இந்த பணத்தைக் கொண்டு செல்லும் போது காணாமல்போனதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹூஸைனிய்யா வீதியைச் சேர்ந்த முயீனுல் ஹக் மற்றும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வநாயகம் தெய்வேந்தீரன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பணம் வீதியில் கிடப்பதை கண்டுள்ளனர்.

இப்பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பணத்தை அடையாளப்படுத்தப்பட்டு உரியவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ.சியாம் ஆகியோர் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

பணத்தை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த இருவருக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன், பணத்தை தொலைத்தவர் கண்டெடுத்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.