நாட்டில் மீண்டும் இன, மத வாதம் தலைதூக்க இடமளிக்கவேண்டாம்! இஷாக் ரஹ்மான் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் உருவாக்க ஜெரொம் பெர்னாண்டோ என்ற மத போதகர் முயற்சிக்கின்றார். இதற்கு இடமளித்துவிட வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாட்டில் ஒருவருடத்துக்கு முன்னர்  இனவாதம், மதவாதம் தலைதூக்கியிருந்தது. இதில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பாரிய போராட்டம் நடைபெற்ற வரலாறும் உள்ளது.

இந்நிலையில் ஜெரொம் பெர்ணான்டோ என்ற மத போதகர் நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் மிக மோசமான  மார்க்கம் என்று கூறி மீண்டும் நாட்டில் இனவாதம், மதவாதத்தை தூண்டிவிட செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனை பேராயரும் எதிர்த்துள்ளார்.

இனவாதம், மதவாதம் நாட்டின் பொருளாதாரத்தை எந்தளவு சீரழித்தது என்பது எமக்கு தெரியும். இதனால் மீண்டும் இனவாதம், மதவாத்ததுக்கு இடமளித்துவிட வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றோம். சிங்கப்பூர், மலேசியா போன்றா நாடுகளில் இனவாதத்தை இல்லாது செய்தமையாலேயே அந்த நாடுகள் முன்னேற்றமடைந்தன. இதனால் இங்கே இனவாதத்துக்கு இடமளிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டத்தை நிலைநாட்டுவதன் மூலமே, அதனைக் காரணம் காட்டி, மறைந்திருக்கும் இனவாதிகள் தலைதூக்குவதை தடுக்க முடியும். அதனால் நாட்டைவிட்டு சென்றுள்ள குறித்த மத போதகரை நாட்டுக்கு  கொண்டுவந்து. அவரிடம் முறையாக விசாரணை மேற்கொள்ளவேண்டும், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியைக் கோருகின்றோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.