புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெற செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்!  பிரதமர் தினேஷ் குணவர்தன  உத்தரவாதம்

புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெற செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். மிகிந்தலை முதல் அநுராதபுரம் வரையான பொசன் உற்சவ வலயத்துக்கு தேவையான நிதி மற்றும் மனித வள ஒத்துழைப்புக்கள் முழுமையாக வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றியவை வருமாறு –

மிகிந்தலை முதல் அநுராதபுரம்  வரையான பொசன் உற்சவத்துக்கு தேவையான  போதுமான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஆகவே இம்முறை பொசன் உற்சவத்தைக் கொண்டாடுவது சிரமமாக உள்ளது என மிகிந்தலை விகாரையின் விகாராதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை புறக்கணிக்க முடியாது. புத்தசாசன நிதியம், ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றில் போதுமான நிதி உள்ளது. ஆகவே அந்த நிதியை கொண்டு உற்சவத்தை விமரிசையாக நடத்தலாம்.

புத்தசாசனத்தை ஆளும் தரப்பினரே அரசியலாக்கினார்கள். அரசியல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்களை பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தாமல் செயலளவில் உறுதிப்படுத்துங்கள். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,   1972 ஆம் ஆண்டு அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு 09 ஆவது அத்தியாயத்தில் பௌத்த மதம் தொடர்பான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தசாசனத்தை பாதுகாப்பதற்கும், அதனை வளர்ச்சி பெற செய்வதற்கும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் பௌத்த மத விவகாரங்களில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அம்சங்களை  நடைமுறைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக பொசன் உற்வசத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் உரிய  நிதி மற்றும் மனித வள ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகவே மிகிந்தலை முதல்  அநுராதபுரம் வரையான பொசன் உற்சவ வலயத்துக்கு தேவையான நிதி வழங்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.