பொலிஸாரின் தாக்குதலில் பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்! வடிவேல் சுரேஷ் வலியுறுத்து
கொழும்பு கொட்டா வீதியில் வீடொன்றில் பணிபுரிந்துவந்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் தற்போது அவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பந்தய சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –
பதுளை நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ராஜம் ராஜகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாய், கொழும்பு கொட்டா வீதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக காnழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்திருக்கிறார்.
இந்த தாய் திரைப்பட நடிகை ஒருவரின் வீட்டிலே பணி புரிந்து வந்திருக்கிறார். அவரின் முறைப்பாட்டுக்கமையவே பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைதுசெய்யப்படும்போது குறித்த பெண் சுகதேகியாகவே இருந்துள்ளார். ஆனால் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
என்றாலும் இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் மரணித்த பெண் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் சடலத்தைக் கொண்டு செல்ல பொலிஸார் 10ஆயிரும் ரூபா வழங்கி இருக்கிறது.
மேலும், எமது முறைப்பாட்டுக்கமைய தற்போது பொலிஸ் அதிகாரிகள் இரணடுபேரை இடை நிறுத்தியுள்ளதாகவும் 4 பெண் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படவேண்டும். அதனால் இது தொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் முறையாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் கொழும்பில் பணிபுரிகின்ற மலையகத்தைச்சேர்ந்த பலருக்கு இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கிறன. அதனால் பணிபுரிகின்ற மலையகம் சார்ந்த இளைஞர்கள், யுவதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை