பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 22 அரசியல் கைதிகளே தடுத்துவைப்பு! நீதி இராஜாங்க அமைச்சர் தகவல்
யுத்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள், கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்விகளுக்கு பதிலளித்த நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள், பெண் கைதிகள், நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள், ஆயுள் தண்டனைக் கைதிகள், சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 290 ஆகக் காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையால் 25 ஆயித்து 899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14 ஆயிரத்து 609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். – என்றார்.
இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு முறையான உணவு கிடைப்பதில்லை என சிறைக் கைதிகளின் உறவினர்கள் முறைப்பாடளித்துள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அமைச்சு அறிந்துள்ளதா எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜயரத்ன, சிறைச்சாலைகளில் விநியோகிக்கப்படும் உணவு தொடர்பில் முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறைச்சாலை கைதிகள் நிர்வாகம், உணவு விநியோகம் உள்ளிட்ட தேவைகளுக்காக வருடாந்தம் 4.6 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் இந்த தொகை வரையறுக்கப்படவில்லை. ஆகவே, கண்டி போகம்பர சிறைச்சாலை தொடர்பில் குறிப்பிட்ட விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம். – என்றார்.
மீண்டும் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளை விடுவிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் நாம் வலியுறுத்தியுள்ளோம். – என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை