காதலித்த பெண்ணையே நான் கரம்பிடித்துள்ளேன்! நாடாளுமன்றில் சமிந்த விஜேசிறி பெருமிதம்
காதலித்த பெண்ணையே கரம் பிடித்தேன். அதனை விடுத்து பெண்களை காதலித்து ஏமாற்றவில்லை. ஊழலற்ற வகையில் அரசியலில் ஈடுபடுகிறேன்.
என் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றது.இதன்போது அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 22 (91) 09 இ10 மற்றும் 11 ஆகிய அத்தியாயங்களுக்கு அமைய செயற்படாமல் விவாத உரையின் போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எனது தனிப்பட்ட விடயங்களைக் குறிப்பிட்டு முறையற்ற வகையில் கருத்துரைத்துள்ளார்.
நான் அவருக்கு திருமண யோசனை ஒன்றை கொண்டு வந்ததாக குறிப்பிட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையின் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். காதலித்த பெண்ணையே நான் திருமணம் முடித்தேன். எனது திருமணத்துக்கு என பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். எதிர்ப்புக்களால் காதலித்த பெண்ணை நான் கைவிடவில்லை.
ஒவ்வொரு பெண்ணை காதலித்து கைவிடும் கொள்கை எனக்குக் கிடையாது. ஆகவே என்னை உங்களுடன் (அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நோக்கி) ஒப்பிட வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் வானம் , பூமி போல் வித்தியாசம் உள்ளது. தனிப்பட்ட விடயங்களைக் குறிப்பிட முடியும். ஆனால் அவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவன் நான் அல்லன்.
ஊழல் மோசடியற்ற வகையில் அரசியலில் ஈடுபடுகிறேன். என் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டுங்கள். உடன் பதவி விலகுவேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை