டயமன்ட், பேர்ள் கப்பல்கள் தீ விபத்துக்கள்: 89 கோடி இந்திய ரூபா டெல்லிக்கு வழங்கல்! நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்
இலங்கை கடற்பரப்புக்குள் தீ விபத்துக்கு உள்ளான எம்.டி.நியூ டயமன்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்களின் போது , தீயைக் கட்டுப்படுத்துவதற்காக உதவிய போது இந்திய கடற்படைக்கு 890 (89 கோடி இந்திய ரூபா) மில்லியன் இந்திய ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவுக்கான தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என நீதி , சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தீ விபத்துக்களுக்காக இந்தியா நஷ்டஈடு கோரியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு –
நியூடயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படை ஒத்துழைப்பு வழங்கிய போது , அவர்களுக்கு ஏற்பட்ட பொருட் செலவுக்கான கொடுப்பனவுகளை மாத்திரம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாறாக இந்திய அரசாங்கம் எந்தவொரு இழப்பீட்டையும் கோரவில்லை.
அதற்கமைய நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தியமைக்காக 400 மில்லியன் இந்திய ரூபாவையும் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 490 மில்லியன் இந்திய ரூபாவையும் இந்திய கடற்படை செலவிட்டுள்ளது. இந்தச் செலவை செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இழப்பீடு கோரி இலங்கை தாக்கல் செய்துள்ள வழக்கில் இந்த செலவுகளையும் இணைத்து , அதனை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலும் இது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செலவிற்கான தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரால் நீதி அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை , குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் தவறாக சித்திரித்து செய்திகளை வெளியிடுகின்றனர். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை