கல்முனை விவகாரம் முதல் முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆராய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் உபகுழு அமைப்பு!

அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக கல்முனை விவகாரம் தொடர்பில் ஆராயும் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன விசேட கூட்டம் கடந்த சனிக்கிழமை சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தையும் பற்றி கலந்துரையாடியதுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கான தீர்வை எட்டும் விதமாக உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

அந்த உப குழு கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் உள்ள விடயங்களை கையாளவுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் அதிக முஸ்லிங்கள் வாழும் நகரம் என்ற அடிப்படையிலும், இலங்கை முஸ்லிங்களின் முகவெற்றிலையாக கல்முனை அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் முஸ்லிங்களின் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் நிறைந்துள்ள கல்முனையின் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு உரியவர்களிடம்  இருந்து தீர்வை பெற முயற்சிகளையும் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்றுமொரு தீர்மானமாக தமிழ் மக்கள் கூடுதலாகவும் முஸ்லிங்கள் குறைவாகவும் வாழும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் முஸ்லிங்களுக்கு இடம்பெறும் அநீதிகள், பாரபட்சங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சர்கள், உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து உரிய தீர்வை பெற இந்த உபகுழு செயற்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சம்மேளன செயலாளர் ஏ.எல். அன்வர்டீன், பொருளாளர் எஸ்.எம்  சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.