இலக்கிய வாதிகள் அனைவரும் சமூகப் போராளிகளே’ ‘நிலவின் கர்ப்பங்கள்’ நூல் வெளியீட்டில் அரச அதிபர்!
( வி.ரி. சகாதேவராஜா)
இலக்கியவாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை
சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி அவர்கள்.
– இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்
காரைதீவில் நடைபெற்ற ‘நிலவின் கர்ப்பங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில்
உரையாற்றுகையில் தெரிவித்தார்.
காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசி எழுதிய ‘நிலவின் கர்ப்பங்கள்’ கன்னி
கவிதைநூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை 3
மணியளவில் காரைதீவில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளரும் கிழக்கு மேலதிக மாகாண கல்வி
பணிப்பாளருமான எந்திரி நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த
விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம்
ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –
பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில் கவிஞர் விபுலசசி, தனது
தந்தை தமிழாசான் அமரர் நல்லதம்பி மனோகரனின் 24 ஆவது வருட
ஞாபகார்த்தமாக இந்த கவிதை நூல் தொகுதியை வெளியிடுவது சாதாரணமானதல்ல.
140 பக்கத்தில் 96 கவிதைகளை அழகாகக் கோர்த்து அடுக்கி உள்ளார் .கவிஞர்
விபுலசசி மனித அவலங்களை மனிதத்துவத்தை சிறப்பாக சொல்லுகின்றார். இந்தக்
கவிதை நூல் சாகித்திய பரிசு பெறும் என்பதில் ஐயமில்லை. காரைதீவின் மைந்தன்
சசிப்பிரியன் ஈழத்து இலக்கிய உலகில் நிச்சயமாக பிரகாசிப்பார். அவர்
மேலும் பல நூல்களைப் படைக்க வேண்டும். – என்றார்.
முதல் பிரதியை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி நூலாசிரியர் மனோகரன் சசிப் பிரியனிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஏனைய அகதிகளுக்கும் கலந்து கொண்டவரகளுக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.
எழுத்தாளரும் உதவி கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சிகளை
நெறியாள்கை செய்தார்.
நூல் நயவுரைகளை வெல்லாவெளி உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், கிழக்கு
மாகாண கிராமிய கைத்தொழில் துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் இராகி, இளங்குமுதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நூல் வெளியீட்டு உரையை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொது
சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி நடேசன் அகிலன் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் மற்றும் கவிஞர் வில்லு பாரதி முரளிதரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நூலாசிரியரின் உறவினரான ஓய்வுநிலை அதிபர் க.புண்ணியநேசன் நன்றியுரையாற்றினார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தரான
மனோகரன் சசிப்பிரியனின் கன்னி கவிதை நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை