ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 53 மில்லியன் டொலர்கள் வீதிகளைப் புனரமைக்கக் கடனுதவி! அமைச்சர் பந்துல தகவல்
இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகளைத் தற்காலிகமாக மீள ஆரம்பிப்பதற்காக 53 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் வரை முற்றாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் தற்காலிகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை அறிவித்ததையடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றின் கடன் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் நேரடியாகக் களத்துக்கு அழைத்து செல்லப்பட்டு , அவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை மக்களுக்கு சிக்கலற்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 53 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
செப்ரெம்பரில் கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அவ்வாறு இடம்பெற்றால் அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடன் கிடைக்கும்.
எனவே கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திம் திட்டங்கள் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.
கடன் மறுசீரமைப்பின் பின்னர் வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதற்கான தவணையை நீடித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அடுத்த வாரமளவில் நிதி அமைச்சு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை