ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாண, மாவட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட அரச திணைக்களங்களில் அமைய அடிப்படையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

மட்டகளப்பு மாவட்டத்தில் குருமன்வெளி மண்டூர், குருக்கள் மடம் அம்பாலந்துறை, சந்திவெளி திகிலிவெட்டை போன்ற பிரதேசங்களை இணைக்கும் ஆற்றின் இடையில் இருக்கும் பாதைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை நீக்குதல், பண்ணையாளர்களின் கால்நடைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற பல கோரிக்கைகள் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.

இந்தப் பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்ட ஆளுநர், குறித்த இடர்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.