தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சேகரித்தநிதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்! நோயாளர் நலன்புரிச் சங்க செயலர் லயன் சி.ஹரிகரன் குற்றச்சாட்டு
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கென லயன்ஸ் கழகத்தின் முன்னாள் ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமாரால் மிகப்பிரமாண்டமான அளவில் சேகரிக்கப்பட்ட நிதி, சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றுவது என கடந்த லயன்ஸ் கழக ஆளுநர் சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லயன்ஸ் கழக ஆளுநரின் இந்தத் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க செயலர் லயன் சி.ஹரிகரன் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
லயன்ஸ் கழகத்தில் 2021 – 2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆளுநராகச் செயற்பட்ட லயன் ஆர்.எல்.ராஜ்குமார், யாழ்.மாவட்டத்தின் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் தான், தற்போது தென்னிலங்கையில் வசித்தாலும் தான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு – அந்தப் பிரதேச சுகாதாரத்துறைக்கு – என ஏதாவது மிகப்பாரிய சேவைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நன்நோக்கில் அதற்கு நிதி சேகரிப்பிலும் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு ஊடாகவும் ஒருகோடியே 91 லட்சம் ரூபா (சர்வதேசத்தால் வழங்கப்பட்ட நிதி உள்ளடங்கலாக) திரட்டப்பட்டது. இந்த நிதியின் ஊடாக புற்றுநோயாளர்களின் சகல விடுதிக் கட்டில்களுக்கும் ஒட்சிசன் வசதிகளை வழங்குவதற்கான தொகுதியும் அமைக்கப்பட்டு வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. மீதமுள்ள 40 லட்சத்துக்கும் வைத்தியசாலையின் அவசர தேவை தொடர்பில் வைத்திய அத்தியட்சகரிடம் வினவியபோது, சத்திரசிகிச்சைக் கூடத்துக்குரிய மருத்துவ உபகரணங்களுக்கான விண்ணப்பமும் கடிதம் மூலம் வழங்கப்பட்டது.
இதற்கான அனுமதியை முன்னாள் ஆளுநர் ஆர்.எல்.ராஜ்குமார், ஆளுநர் சபையில் வேண்டுகையை சமர்ப்பித்தபோது ஆளுநர் வைத்தியர் அநோமாவின் முறைகேடான செயற்பாட்டால் அந்த நிதி சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றுவது என அவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அவையால் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் வெட்கக்கேடான விடயம் என்னவென்றால், எமது வடபகுதியைச் சேர்ந்த சில லயன்ஸ்களும் அதற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். வடக்கு மட்டுமல்ல கிழக்கு, அநுராதபுரம், புத்தளம் ஏன் சிலாபத்தில் இருந்துகூட புற்றுநோயாளர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இதனை வடபகுதியைச் சேர்ந்த சிலர் உணராமல் இதற்கு எதிராகச் செயற்பட்டமை வேதனையைத் தருகின்றது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பெயரைப் பயன்படுத்தி – அங்குள்ள மிகக் கொடூர நோயாகிய புற்றுநோயாளர்களுக்கு உதவுவதற்கென – சேகரிக்கப்பட்ட நிதி ஒரு ரூபாகூட வெளியில் செல்வதற்கு நாம் என்றைக்கும் அனுமதிக்கமாட்டோம். அந்த நிதி முழுமையுமாக யுத்தத்தால் பின்தங்கிய மாவட்டமாகிய யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வலி.வடக்கில் அமைந்துள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே வழங்கப்படவேண்டும். இது தொடர்பாக நான் முன்னாள் ஆளுநர் சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாகக் கடிதம்மூலம் தெரியப்படுத்தி இருக்கின்றேன். அதன் தலைவராக இருப்பவர் எமது வடபகுதியைச் சேர்ந்தவர். சுகாதாரத்துறையின் முக்கியத்துவத்தையும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தேவைகளையும் நன்கு உணர்ந்த நூற்றாண்டு ஆளுநர் லயன் வைத்தியர் லயன் வி.தியாகராஜா. இந்தத் திட்டம் தெல்லிப்பழையில் ஆரம்பிப்பதற்கு முக்கிய இணைப்பாளராகச் செயற்பட்டவர் வைத்தியர் லயன் வி.தியாகராஜா. நாளை (சனிக்கிழமை) இவரது தலைமையில் முன்னாள் ஆளுநர்களின் உயரிய அவை கூடுகின்றது. அவர்கள் முடிவெடுப்பவர்கள் அல்லாது விடினும் இந்த விடயம் தொடர்பில் விவாதித்து ஆளுநருக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவார்கள் என்று எண்ணுகின்றேன். இது தொடர்பில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆளுநர் சபைக் கூட்டத்தில் பங்குபற்றும் அனைவருக்கும் பிரத்தியேகமாக கடிதம் மூலம் அறிவித்துள்ளேன். எவ்வாறாயினும் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார்கள் என்று எண்ணுகின்றேன். இதில் ஆரோக்கியமான பதில் கிடைக்கப்பெறாவிட்டால். சர்வதேச லயன்ஸ் கழகம் ஊடாக நடவடிக்கை எடுக்க முனைவேன். அதுவும் தவறின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பெயரில் நிதி சேகரித்து வேறு வைத்தியசாலைக்கு வழங்கினால் நிதி அன்பளிப்புகளை வழங்கிய தனிநபர்களைத் திரட்டி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டியும் ஏற்படலாம். -என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை