பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல்கள்!
பாறுக் ஷிஹான்
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது.
இந்நிகழ்வு கல்முனை பிராந்திய மனித உரிமைஆணைக்குழுவின் மண்டபத்தில்
கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஏ.சி
அப்துல் அஸீஸ் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அங்கு கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் –
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பிலான ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டதுடன் பிராந்திய மட்டத்தில் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட குறித்த வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதுடன் இது பற்றிய அபிப்பிராயங்களைப் பங்குபற்றுநர்களிடமிருந்து பெற்று அதனை ஆணைக்குழு உள்வாங்குவதேயாகும்.
எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2022 ஆம் ஆண்டில் எமது நாட்டில்
இடம்பெற்ற பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மிகவும் உன்னிப்பாகக்
கண்கானித்ததுடன் இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நிகழ்ந்த மனித உரிமைகள்
மீறல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தியுள்ளது எனவும் அரசமைப்பில்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது
மனித உரிமையைப் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தில் அத்தகைய எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களின் போது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதைத் தவிர்ப்பதற்கும்
காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறும் அதிகாரம்
இருப்பதால் ஆணைக்குழு இந்த வழிகாட்டல்கள் மூலம் அப்பணியைச் செய்கிறது என
குறிப்பிட்டார்.
இதில் பங்குபற்றுநர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது –
அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை வன்முறையைப் பிரயோகிப்பதன் மூலம் அனுபவிக்க முடியாது. இது அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமை உறுப்புரை பதினாளில் பாதுகாப்பளிக்கப்படுகிறது என்பதால் சகல கூட்டங்களின் மீதும் அரசு ஒரு கண்மூடித்தனமான முழுமையான தடைகளை விதிக்கக்கூடாது என்பதுடன் அந்தக்கூட்டம் அமைதியான முறையில் நடைபெறுமாக இருந்தால் அதற்கான பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடற்பாடாகவுள்ளது எனவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இரு குழுக்களிடையே பதற்றமும் கடுமையான வாக்குவாதங்களும் ஏற்படுவதற்கான வெறும் சாத்தியம் ஒரு கூட்டத்தை தடைசெய்யும் வகையில் நியாயப்படுத்துவதற்கு போதுமான ஓர் ஆதாரம் அல்ல
என்பதைப் பாதுகாப்புத் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களின் போது அரசியல்வாதிகளின் தூண்டுதலின் காரணமாக நடத்தப்படுகின்ற வன்முறைகளால்தான் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் பொலிஸார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக அந்தந்த நேரத்தில் சில செயற்பாடுகளைச் செய்கின்ற போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு பொலிஸாரைத் தாக்குகின்ற சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. சட்டத்தையும் நீதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு பொலிஸாருக்கு இருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்கூட்டியே அச்சுறுத்தி அவர்களது தகவல்களைப்பெற்று அமைதியான ஒன்றுகூடலைத் தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அரச அலுவலர் ஒருவர் தனிப்பட்ட விடுமுறையியை எடுத்து மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து கலந்து கொள்கின்ற போது அவரை நிர்வாக ரீதியாகப் பழிவாங்கக்கூடாதெனவும் ஆர்ப்பாட்டங்களின் போது பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் எனவும் பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திரமாக கண்கானிக்கும் குழுக்கள் நியமிக்கப்படவேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது பொலிஸ் அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் கல்வித்
திணைக்கள அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட
சிவில் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
கருத்துக்களேதுமில்லை