அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்கு வைத்து ஒலிஃஒளி பரப்பு சட்டமூலம் கெவிந்து குமார குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி மற்றும் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.
பொரள்ளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாடாளுமன்றத்தைப் பலப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்.
நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் தமது அரசியல் இருப்புக்காக ஜனாதிபதியின் சகல செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஏழ்மை, தொழிலின்மை ஆகிய பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றன. நடுத்தர மக்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
நாடாளுமன்றத்தில் எவ்வித வாதபிரதிவாதங்கள் இன்றிய நிலையில் திறைசேரி உண்டியல்களின் எண்ணிக்கை 5000 பில்லியன் ரூபா முதல் 6000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பாதிப்புக்குத் தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையான முறையில் செயற்படுகிறார்.
நாட்டு மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக திசைதிருப்பும் வகையில் அரசாங்கம் ஒருசில செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளது.
பௌத்த மதத்துக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
ஒளி மற்றும் ஒலி பரப்பு அதிகார சபை சட்டமூலத்தை இயற்ற அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களைக் இலக்காகக் கொண்டு இந்த சட்டமூலத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம். -என்றார்.
கருத்துக்களேதுமில்லை