நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சவூதி அரேபியா, அப்ஹா கிங் கைலிட் பல்கலைக்கழகத்தில் வெகு பிரமாண்டமாய்
சுமார் 50,000 பேர் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஜாபீர் , அலிஜாபீர் பாட நெறிகளைப் பூர்த்திசெய்து, உயர் தகைமைப் பட்டச் சான்றிதழ்களை  பெற்றுக் கொண்டனர்.

சவூதி அரேபியாவில் மார்க்க விழுமிய கல்வியிலும் – உலகக் கல்வியிலும் உன்னத அடைவுகளை தமதாக்கி கொண்ட இவர்கள், சவூதி அரேபியாவின் அஸீர் மாகாணத்தின் அப்ஹாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மருதூரைப் பூர்வீகமாக கொண்ட அஹமட்லெவ்வை ஜாபீர் மற்றும் ஸியானா அப்துர் றஸ்ஸாக் பிரிய தம்பதிகளின் பேரன்புப் புதல்வர்களான  அப்துல்லாஹ் ஜாபீர், அலி ஜாபீர் ஆகியோரின் கனதியான கல்வி அடைவுகள் கிழக்கு மண்பதிமருதூருக்கும், நமது தேசத்திற்கும் பெருமை சேர்க்கின்றன.

இவர்கள் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவினைச் சேர்ந்த மர்ஹூம்களான அல்ஹாஜ்
அப்துர் ரஸ்ஸாக் மௌலவி (ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர், சாய்ந்தமருது
ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்) சஹீது
ஆமினா உம்மா மற்றும் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை, ஆமீனா ஆகியோரின்
பேரப் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவர்கள், தமது ஆரம்பக்கல்வியை தரம் 1- 6 வரை (2006 – 2012) அப்ஹா ஷாம்சன் பாடசாலையில் கற்றனர்.

தாம் கற்ற பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களைப் பேணியமைக்காகவும், ஆரம்பக்
கல்வியில் அவர்கள் சிறந்த அடைவுகளை பெற்றமைக்காகவும்  அனைத்துப் பாடசாலை
ஆசிரியர்களதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தமைக்காக அப்பாடசாலையின்
நிர்வாகத்தினரால் அவர்கள் இருவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோல் அல்குர்ஆனை தமது அன்புத் தாயார் ஷியானா அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் வழிகாட்டலுடன் கூடிய துணையோடு வீட்டில் இருந்தபடி மிகச் சீரிய முறையில் கற்றுக்கொண்டனர். இதனூடாக சுமார் 15 ‘துஸுக்களை’ மனனம் செய்திருக்கின்றனர்.

மேலும்  இம்மாணவர்கள் 7 ஆம் வகுப்பு தொடக்கம் 9 ஆம் வகுப்புவரை (2012
-2015) தமது அடுத்த கட்ட கல்வியை அப்ஹா  பாடசாலையில் கற்றுத் தேர்ச்சி பெற்றனர்.

இக்கால கட்டத்தில் தாம் கற்ற அனைத்து பாடங்களிலும் மிகச் சிறந்த
புள்ளிகளைப் பெற்றமைக்காக அவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர
அம்மாகாணத்தின் சிறந்த பாடசாலையில் கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

குறித்த இம்மாணவர்கள் இருவரும் தமது 13 ஆவது வயதில் இமாம்களாகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டு மார்க்கப் பணியாற்றி வருவதுடன் இன்றுவரை அப்புனித
கடமையைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி அரேபியாவில் வசிக்கும் இவர்கள் அதே மண்ணில் ஆரம்பக்
கல்வியில் இருந்து, உயர் கல்வி வரை கற்ற முதலாவது இலங்கையர்கள் என்பதும்
பெருமைக்குரிய விடயமாகும்.

இந்நிகழ்வின் போது சவூதி அரேபியாவினைச் சேர்ந்த 15,000 மாணவர்கள் பல்வேறு
துறை சார்ந்து இப்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

சாய்ந்தமருதூரில் இருந்து சவூதி அரேபியாவுக்குப் புலம் பெயர்ந்தாலும்
தமது உயர் இலட்சிய இலக்குகளை வெற்றி கொண்டு இலங்கைக்கும், தன்
சமூகத்திற்கும் பெருமிதம் சேர்த்துள்ள இம்மாணவர்கள் இருவருக்கும்,
இவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசான்களுக்கும் இலங்கை
வாழ் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.