அரசுக்கு எதிராக அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவர்! மக்கள் அல்லர் என்கிறார் பிரசன்ன ரணதுங்க
அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்களை ஒன்றுத்திரட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் போராட்டத்தை நாங்களும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். எரிபொருள், மின்சார விநியோகம் ஆகிய அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் கொள்ளையடித்தார்கள்.
பாரிய பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னிலை தரப்பினர்கள் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலத்தையும் இல்லாதொழிக்கிறார்கள். பலவந்தமான முறையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை