தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயகம் மீறும் செயல்! சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு

தேர்தலைத் தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயகப் பண்புகளை மீறுவதுடன், உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  சிவில் விமான சேவை மற்றும் கப்பற்துறை சேவை  சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஜனாதிபதி  ரணில்  விக்கிரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் தான் பிரதமராகப் பதவியேற்றார்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதாரம் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தின் போது தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்று நிலைமையைச் சீர்செய்துள்ளார்.

கடந்த  ஆண்டு நாடு பற்றியெறிந்து பொருளாதாரத்தில் பின்னவடைவில் இருந்த போது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாது இருந்த வேளை இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்று பலரும் கூறிய நிலையில் ரணில் விக்கிரமசிங்க தற்துணிவுடன் அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி  தனது அனுபவங்களின் மூலம் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டு வருவதுடன், நாட்டில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றார்.

இதன்படி வடக்கு மற்றும்  கிழக்கில் அதிகாரப் பகிர்வு மாகாண சபைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் தமிழர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளார். அதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானை நியமிக்கப்பட்டுள்ளார்.

200 வருடங்களுக்கு முன்னர் இங்கே தொழிலுக்காகக் கொண்டு வரப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கையில் அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வந்த தலைவர்களின் வரிசையில் வந்த வாரிசுகள் கிழக்கு மாகாணத்துக்கு வந்து பணி செய்வதை மேம்பட்டதாக பார்க்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தலை நடத்தாது தொடர்ந்து பிற்போடுவதை  தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்கவில்லை.

தேர்தலை தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயக பண்புகளை மீறுவதுடன், உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும்.

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.