வரிசை யுகம் மீண்டும் வெகுவிரைவில் வரும்! சம்பிக்க ஆரூடம்

பொருளாதார பாதிப்புக்குத் தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும்.

கடன் மறுசீரமைப்பின் தாக்கம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு பின்னரே வெளிப்படும். ஆகவே, அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் தற்போதைய இயல்பு நிலை தற்காலிகமானதே. வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத காரணத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

4.5 பில்லியன் டொலர் அரசமுறை கடன்களை செலுத்துவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது. தற்போது 3 பில்லியன் டொலர்கள் மாத்திரமே வெளிநாட்டு கையிருப்பில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 1.5 பில்லியன் டொலர் சீனாவால் வழங்கப்பட்ட கடனாகும்.அந்த கடன் இருப்பைப்  பாவிக்க முடியாது. ஆகவே தற்போதும் வெளிநாட்டு கையிருப்பின் தன்மை நிலையற்றதாக உள்ளது.

வரிசை யுகம்,பழைய முரண்பாடுகள், பழைய கலவரங்கள் மீண்டும் தோற்றம் பெறும். ஆகவே தற்போதைய நிலைமையை  சரி என்று குறிப்பிட முடியாது.

நெருக்கடிகளுக்குத் தற்காலிக இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உறுதியான திட்டத்தை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். தற்போது தேசிய கடன் செலுத்தப்படுகிறது,வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படுவதில்லை.

கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் வட்டியுடன் வெளிநாட்டு கடன்களை நிச்சயம் செலுத்த நேரிடும். 2024 ஆம் ஆண்டு கடன் மறுசீரமைப்புடன் தோற்றம் பெறும். மாறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பக்கப்படும் போது ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். உழைக்கும் மக்களின் மீது பொருளாதாரப் பாதிப்பின் சுமை திணிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வட்டி வீதம் தொடர்பில் தற்போது விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

பணவீக்கம், வட்டி வீதம் ஏன் அதிகரிக்கப்பட்டது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 3 ரில்லியன் ரூபா நாணயங்களை அச்சிட்டார்.

நாணயம் அச்சிடுவதை  வரையறை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்திய போது அப்போதைய நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால்  நாணயம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது என நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற வகையில் உரையாற்றினார்.

பொருளாதாரப் பாதிப்பைத் தீவிரப்படுத்தி விட்டு தற்போது அவர் சுகபோகமாக வாழ்கிறார். ஆனால் பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாதவர்கள்  தற்போது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதாரப் பாதிப்பால் மூளைசாலிகள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன் வட்டி வீதம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் மிகுதியாகவுள்ள தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் துரிதமாகச் செயற்பட வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வுகாண்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு  நாட்டு மக்களையும், தொழில் முயற்சியாளர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

படித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு அறிவார்ந்தவர்களற்ற பாலைவனம் போல் மாற்றம் பெறும். அதன் பின்னர் எவர் நாட்டை ஆட்சி செய்தாலும் ஒருபோதும் முன்னேற முடியாது. – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.