சிலவங்கி அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபாடு! நீதி அமைச்சர் விஜயதாஸ குற்றச்சாட்டு

வங்கி அதிகாரிகள் சிலர் அடகு சொத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஏல விற்பனைகளின்போது சூழ்ச்சியான வகையில் அந்த சொத்துக்களை தங்களின் ஆள்களையே கொண்டு கொள்வனவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாட்டின் அடகுச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை வங்கி, நிதி நிறுவனத்தில் அடகு வைத்த பின்னர் அடகு பணத்தை மீளச் செலுத்த முடியாமல் போனால், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இதில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளுக்கு விசேட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் உடன்படிக்கைக்கு அமைய, யாருக்காவது அடகு பணத்தை மீளச்செலுத்த முடியாமல் போனால், அந்த வங்கிகளின் நிறைவேற்றுச் சபையின் தீர்மானத்தின் ஊடாக அந்தச் சொத்துக்களை ஏல விற்பனைக்கு விட முடியும்.

பின்னர், அது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து தனியார் வங்கிகளுக்கும் அந்த சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்படியே இப்போது நடக்கின்றது.

இந்நிலையில், சில வங்கிகளில் அதிகாரிகள் மிகவும் மோசடிக்காரர்களே. வேண்டுமென்றே கொடுக்கல் – வாங்கல்காரர்களை ஏமாற்றி, சூழ்ச்சியான வகையில் அந்த சொத்துக்களைத் தங்களின் ஆள்களை அனுப்பி அவற்றை விற்கும் செயற்பாடுகள் நடக்கின்றன.

இதேவேளை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றது என்று கூறப்படும் நிதி நிறுவனங்கள் பல உள்ளன. அந்த நிறுவனங்களில் பலர் தமது வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைத்து பணம் பெறுகின்றனர்.

அதன்போது அவர்களின் காணிகள், வீடுகள் உள்ளிட்ட மற்றைய சொத்துக்களையும் எழுதிக்கொள்கின்றனர். அவற்றையும் அந்த பணத்தை மீள செலுத்திய பின்னரே கையளிப்பார்கள்.

இதன்படி, நொத்தாரிஸ் சட்டத்தில் திருத்தத்தை முன்வைத்துள்ளோம்.  ஆனால், பல நொத்தாரிஸ்கள் எந்தவித பொறுப்புகளும் இன்றி உறுதிப்பத்திரங்களை எழுதுகின்றனர்.

இதன்படி, இனி நொத்தாரிஸ்கள் உறுதிப்பத்திரங்களை எழுதும்போது, குறிப்பாக, கையளிப்பு உறுதிப்பத்திரமாக இருந்தால், அதன் கொடுக்கல் – வாங்கல் நடந்தது என்பதை உறுதிப்படுத்தியே அதனை எழுத வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவ்வாறான திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டத்தை  எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க இருக்கிறோம். – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.