மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு!
மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்விடயம் குறித்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற உள்ள மடு அன்னையின் ஆடி திருவிழாவிற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக சுகாதாரம்,மருத்துவம்,குடிநீர் ,போக்குவரத்து,பாதுகாப்பு,உணவு உள்ளிட்ட முக்கிய விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இம்முறை சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆடி திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆடி மாத திருவிழா ஆரம்பமாகும்.
ஆடி மாதம் 2ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். அதனைத்தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப ஆசிருடன் திருவிழா நிறைவடையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை