பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் ஆளுநராக நியமிக்கப்பட்ட நவீன் சூழுரை!
ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதை பின்னர் தீர்மானிப்போம் என சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
சம்பகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
பிரதான இரண்டு காரணங்களை அடிப்படையாக்கொண்டே சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நான் 10 வருடங்கள் அமைச்சரவை அமைச்சராகச் செயற்பட்டிருக்கிறேன்.
அவ்வாறு இருக்கையில் மாகாணத்துக்கு செல்ல தீர்மானித்ததன் பிரதான காரணம்தான், மாகாணசபை செயற்படாத சந்தர்ப்பங்களில் மாகாணம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்கே கிடைக்கப்பெறுகின்றன. அதனால் அந்த அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு சப்ரகமுவ மாகாணத்துக்கு பாரிய சேவை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பேன்.
அடுத்த விடயம் என்னவென்றால், சவால்களுக்கு முகம்கொடுப்பது என்பது நாங்கள் ஜனாதிபதியிடமிருந்து கற்றுக்கொண்ட விடயமாகும். அதனால் தற்போது பொருளாதார நெருக்கடி உள்ள சந்தர்ப்பத்தில், அரச செலவுகள் குறைக்கப்படும் இந்த நேரத்தில், என்னுடைய திறமையால் குறிப்பாக தனியார் துறையிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு சம்பரகமுவில் விசேடமாக கல்வித்துறைக்கு பாரிய சேவையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன். 18 மாதங்கள் என்ற காலத்துக்குள் என்னால் இதனை செய்ய முடியுமானால் அது தனிப்பட்ட ரீதியில் எனக்கு கிடைக்கும் பாரிய வெற்றியாகவே கருதுகிறேன்.
மேலும் நான் ஆளுநராகப் பதவி ஏற்றதை ஒரு விதியாகவே பார்க்கிறேன். ஏனெனில் என்னுடைய தந்தை காமினி திஸாநாயக்கவே இலங்கைக்கு மாகாணசபையை அறிமுகப்படுத்தியவர். அதனால் அவரின் மகனாக ஆளுநராக நியமிக்கப்பட்டு செல்கின்றமை உண்மையில் கடவுளின் செயலாகும். எனவே சப்ரகமுவ மாகாணத்துக்கு என்னால் முடிந்த சேவையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன்.
நான் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்துவந்தவன். அதனால் அரசியல் செய்துவந்த மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட முடியாது என்றதொரு நியதியும் இருக்கிறது. அதனால்தான் மத்திய மாகாணத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் சப்ரகமுவ மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும் எனது இருதயம் மத்திய மாகாணமாகும்.
அத்துடன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளபோதும் அடுத்த பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். ஆனால் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதுதான் அடுதத பிச்சினையாக இருக்கிறது. என்றாலும் எனது திறமைக்கு அமைய நுவரெலியா, கண்டி மாவட்டம் அல்லது சம்ரகமுவவில் மாவட்டம் ஒன்றாகவும் இருக்கும். அதனால் அது ஒருபிரச்சினையாகாது என்று நினைக்கிறேன். அனைவருடனும் கலந்துரையாடி அதனை தீர்த்துக்கொள்ள முடியும். அது தொடர்பில் தற்போது அவசரப்படத் தேவையில்லை. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை