நாடு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் ரணிலின் காலை வாரிவிடுவது முறையற்றது! பிரசன்ன ரணதுங்க மனவருத்தம்

 

அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்திருக்கலாம். நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

பொருளாதார முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி எடுத்த பிரபல்யமடையாத தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே, ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக அரசியல் களத்தில் குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும்.

ஜனாதிபதியுடன் இணக்கமாகவே செயற்படுகிறோம். இரு தரப்பிற்கும் இடையில் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அந்த வேறுபாடு எந்நிலையிலும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்காது. அரசியல் அனுபவம், சர்வதேச உறவு ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த 69 லட்ச மக்களுக்காகவே தற்போது முன்னிலையாகியுள்ளோம். தற்போதைய நிலையில் அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் ஒருசில சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்திருக்க முடியும். கடந்த ஆண்டின் நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஆகவே ஜனாதிபதியின் காலை வாரிவிடும் வகையில் செயற்படுவது முறையற்றது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்கள் தொடர்பாகக் கட்சி என்ற ரீதியில் தீர்மானித்துக் கொள்ளலாம். தற்போதைய நிலையில் நாடு குறித்து மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரபல்யமான தீர்மானம் எடுக்கவில்லை. பிரபல்யமான தீர்மானங்களால் மாத்திரம் நாட்டை நிர்வகிக்க முடியாது. 2048 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்ற நிலையில் இருந்து கொண்டு ஜனாதிபதி கொள்கைத் திட்டங்களை வகுத்துள்ளார். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

ராஜபக்ஷர்களை இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை. வரலாறு தெரியாத இளம் தலைமுறையினரே ராஜபக்ஷர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறார்கள். பொருளாதாரம் மற்றும் அரசியல் என்ற ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்திய பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பின்தொடர்ந்து செல்கிறார்கள். நாட்டு மக்கள் உண்மையை தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பாரிய மாற்றம் ஏற்படும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்குத் தயாராகவே உள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.