ஆற்றைக் கடப்பதற்காக மொட்டுக் கட்சியினர் பயன்படுத்திய மரக்குற்றியே ஜனாதிபதி ரணில்! அஜித் பி பெரேரா சாட்டை
மொட்டு கட்சியினர் தமது அரசியல் கட்சியை ஜனாதிபதிக்கு விற்பனை செய்வதற்கு தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆற்றை கடப்பதற்காக மொட்டு கட்சியினரால் பயன்படுத்தப்பட்ட மரக்குற்றி மாத்திரமே.
அந்த மரக்குற்றி மீதேறி மொட்டு கட்சியினர் கரையை அடைந்ததன் பின்னர், மரக்குற்றியை கைவிட்டுவிடுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் –
தற்போது ஒன்று மாத்திரம் தெளிவாகிறது. மொட்டு கட்சியினர் தனது அரசியல் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விற்பனை செய்வதற்குத் தயாரில்லை.
மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வரவில்லை. இதிலிருந்து அவர்கள் வழங்கியுள்ள செய்தி என்ன? எமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமையால் வரவில்லை, எமக்கு வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
அவர்கள் திருடர்கள் கூட்டத்தினர். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த அணியினர். நாட்டை அழிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்ட தரப்பினர். இதன் காரணமாகவே அவர்களுக்கு பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி கூறுகிறார்.
இந்த போராட்டம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது? தோல்வியடைவதற்கேனும் மொட்டு கட்சியினர் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக சாகர காரியவசம் தெரிவித்த கருத்துகளில் அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றை கடப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மரக்குற்றியொன்று மாத்திரமே. அந்த மரக்குற்றியின் மீது ஏறி மொட்டு கட்சியினர் ஆற்றை கடந்ததன் பின்னர், மரக்குற்றியைக் கைவிட்டுவிடுவார்கள்.
மொட்டு கட்சியுடன் பயணிப்பது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கனவு மாத்திரமே. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை