சர்வதேச கடன்மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை ஜனாதிபதி ரணிலின் பிரான்ஸ் விஜயம் ஏற்படுத்துமாம்! நம்புகின்றார் ஷெஹான் சேமசிங்க
ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டில் வெளிப்படை தன்மையையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
எனவே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதனை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என நம்புவதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயம், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பான பேச்சுகளில் சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும் என்றும் பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில் –
இவ்வாண்டின் நடுப்பகுதியில் எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் உயர்மட்டத்தை அடையும். வெகுவிரைவில் பொருளாதாரம் முழுமையான ஸ்திரத்தன்மையை அடையும் என நம்புகின்றோம்.
எவ்வாறிருப்பினும், எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள், பொருளாதாரத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் என்பவற்றில் தளர்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை.
காரணம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாம் கட்ட கடன் தொகையை மாத்திரமே பெற்றுள்ளோம். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பேச்சு மட்டத்திலேயே உள்ளன.
அவை இன்னும் இறுதிக் கட்டத்தை அடையவில்லை. எனினும், முதலாவது மீளாய்வின் பின்னர் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனினும், 2024இல் பொருளாதார வளர்ச்சி வேகத்தை நோக்கி எம்மால் பயணிக்க முடியும். சர்வதேச சந்தைக்குள் நுழைவதன் ஊடாக பொருளாதாரத்தை துரிதமாக பலப்படுத்த முடியும்.
இன்று வட்டி விகிதங்கள் குறைவடைந்து வருகின்றமை சிறந்த சமிக்ஞையாகும். கடந்த ஓராண்டுக்கு முன்னர் அத்தியாவசிய சேவைகளைக்கூட வழங்க முடியாத நிலைமையிலேயே நாம் காணப்பட்டோம். எனினும், இவ்வாண்டு அந்த நிலைமையை வெற்றிகரமாகக் கடந்துள்ளோம்.
எதிர்காலம் குறித்து மிக அவதானத்துடன் சிந்தித்து செயற்படுவோம். சில தீர்மானங்களால் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
இதில் மிக முக்கியமானது ஊழல், மோசடிகளை முற்றாக இல்லாதொழிப்பதாகும். அந்த வகையில், இந்த வாரம் மிகவும் தீர்க்கமானதாகும்.
இவ்வாரம் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதனை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம்.
ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் வெளிப்படைத்தன்மையையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரான்ஸ் விஜயம் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சாதகமான பிரதிபலனை பெற்றுக்கொடுக்கும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு படிப்படியாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதோடு, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை