இறக்குமதித் தளர்வு தொடர்பான முழுமையான அறிக்கை இம்மாத இறுதியில் நாணயநிதியத்திடம்! ஷெஹான் சேமசிங்க தகவல்

 

நாடு என்ற ரீதியில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. எனவே, ரூபாவின் பெறுமதியைத் தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணும் அதேவேளை, இறக்குமதித் தளர்வுகளையும் மேற்கொள்ளல் தொடர்பான முழுமையான அறிக்கை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மைத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் போது ரூபாவின் பெறுமதியில் தளம்பல் நிலைமை ஏற்படும். எனவே, ரூபாவின் பெறுமதியை தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணுவதற்காக இறக்குமதித் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை , ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு முதலாம் காலாண்டில் இறக்குமதி 28 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போன்று ஏற்றுமதியும் 9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது இவ்வாறான நிலைவரங்கள் ஏற்படும்.

எனினும் இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த நிலைமை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கின்றோம். இறக்குமதி கட்டுப்பாடுகளால் சுங்க திணைக்களத்திடமிருந்து கிடைக்கும் பாரியளவு வரி வருமானம் குறைவடைந்துள்ளது. வாகனங்களுக்கான இறக்குமதித் தடை இவ்வாண்டுகள் நீக்கப்பட மாட்டாது.

தற்போது சுமார் 900 பொருள்களுக்கான இறக்குமதித் தடை தொடர்ந்தும் காணப்படுகிறது. இவற்றில் 300 பொருள்கள் வாகனங்களுடன் தொடர்புடையவையாகும். எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய, மேற்கூறப்பட்ட காரணிகளையும் கவனத்தில் கொண்டு இம்மாத இறுதியில் இறக்குமதித் தடையில் கால அட்டவணை அடிப்படையில் தளர்வுகளை மேற்கொள்ளல் தொடர்பில் முழுமையான அறிக்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச கடன் வழங்குநர்களிடமும் இது தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.