பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்க விதிவிலக்கொன்று உள்வாங்குக! நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாக ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சபாநாயகருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எனினும், இடம்பெறும் விவாதத்துக்கு முன்னர் மறுசீரமைக்கப்பட வேண்டிய இரண்டு முன்னுரிமைகள் இனங்காணப்பட்டுள்ளன என சுதர்ஷினி பர்னாந்துபுல்லே அறிவித்துள்ளார்.
அதில் முதலாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் நாட்டம் எனும் குற்றத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் நாட்டம் என்பதன் மூலம் குற்றம் சிறிதாக்கப்படுவதாகவும் அதனால், அதற்குப் பதிலாக பாலியல் இலஞ்சம் எனும் பதம் மூலம் குற்றத்தின் தீவிரத்தன்மை சிறந்த முறையில் காட்டப்படுவதால் அந்தப் பதத்தை பயன்படுத்துமாறும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இரண்டாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலஞ்சம் சம்பந்தமாக, இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் எனும் கருத்தைக் கொண்ட பிரிவைக் காரணமாகக் கொண்டு பாலியல் இலஞ்சம் என்பதில் உள்ள பாலினம் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பில், இலஞ்சம் வழங்கும் நபருக்கு அநியாயம் இழைக்கப்படக்கூடும் எனவும் சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் பாலியல் இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் விதிவிலக்கொன்றை உள்வாங்குமாறு கோரிக்கை விடுப்பதாக பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை