டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பங்காற்றிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்க! பிரசன்ன ரணதுங்க அரசிடம் வலியுறுத்து
டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பெரிதும் பங்காற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலணியின் ஊடாகவும் ஆளுநர்களின் தலைமையிலும் மாகாண மட்டத்திலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான விசேட வேலைத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ – தற்போது டெங்கு பிரச்சினை மிகவும் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
டெங்கை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றிய அந்தக் குழு நிரந்தரமாக்கப்படவில்லை.
எனவே, இந்த தற்காலிக நியமனங்களைப் பெற்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். அப்போது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய முடியும்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல – எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறேன்.
இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு. இந்தக் குழுவிற்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. இவர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அடிப்படைத் தகுதிகளைப் பார்க்க முடியாது.
தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் போது இவர்களுக்கும் வேலை வழங்குவதற்காக மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கு உடன்படவில்லை என நிர்வாக சேவை தெரிவித்துள்ளது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை நான் கைவிட மாட்டேன்.
இதை மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கு கொண்டு வருகிறேன். தற்போது நாள் ஒன்றுக்கு 700 ரூபா ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் செய்யும் வேலையைப் பார்க்கும்போது, இந்த சம்பளத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ – பொதுவாக நாங்கள் விமர்சனம் செய்கிறோம். ஆனால் சுகாதார அமைச்சரின் சிறந்த நேர்மறையான பதிலுக்கு நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – ஜனாதிபதி செயலணியின் தலைமையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் ஆளுநர்களின் தலைமையில் மாகாண மட்டத்தில் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் டெங்கு ஒழிப்பு பணியில் உள்ளூராட்சி அமைப்புகள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன. அந்த குழுக்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை. அவர்களின் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை