மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகளால் அறிவிக்கப்பட்டது.
நிகழ்வு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக “புறக்கணிக்கப்பட்ட மலைகள்” என்ற தலைப்பில் கிசோகுமாரின் புகைப்பட கண்காட்சியும், “தேயிலை சாயம்”, எனும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் புகைப்படங்களின் கண்காட்சியும் ஜுன் 23 தொடக்கம் ஜுன் 25 வரை, யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் 286, பிரதான வீதி, அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் ஜுன் 25 மாலை 3 மணிக்கு டிக்கோயா நுண்கலைக் கல்லூரி வழங்கும் நாட்டியநாடகம் மற்றும் பொதுக்கூட்டம் என்பனவும் இடம்பெறவுள்ளது.
இதன்போது, இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம், அரசியல் ஆய்வாளர்களான சி.அ.ஜோதிலிங்கம், ம. நிலாந்தன் ஆகியோர் உரையாற்றுவர்.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் திட்ட முகாமையாளர் ரல்ஸ்டன் வீமன், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் திட்ட இணைப்பாளர் அருட்பணி ஜுட் சுதர்சன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை