ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை படு கொலை செய்யப்பட்டுள்ளாராம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சந்தேகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த சிறந்த தலைவர். அவர் சிறந்த  அறிவார்ந்தவர். அனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர். அதனால் அவரை நான் வடக்கு ஆளுநராகவும் பின்னர் மாணிக்ககல் கூட்டுத்தாபன தலைவராகவும் நியமித்தேன். அதேபோன்று அவர் அரசியல் துறையில் அமைச்சு பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.

அத்துடன் ரெஜினோல்ட் குரே மரணித்தார் என நான் நம்பமாட்டேன். அவர் தனது உயிரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக அர்ப்பணித்தார் என்றே தெரிவிக்கிறேன். அவரின் மரணம் தொடர்பில் நான் அறிந்த மட்டில் விசாரணை ஒன்று இடம்பெறவில்லை. என்றாலும் ஒருவகையில் அது கொலை. அவர் மரணித்தார் என்பதைவிட  அவரைப் படுகொலைசெய்தார்கள் எனத் தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போபவனல்லன்.

ஏனெனில் கடந்த மாகாணசபை தேர்தலுக்காக வேட்புமனு கோரிய கட்டத்திலே அவருக்கு இருதய நோய் ஏற்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்துக்குள்தான் களுத்துறை மாவட்டத்துக்காக வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலுக்கு கலந்துகொள்ள சென்றிருந்தார்.

அவர் இந்த கலந்துரையாடலுக்கு செல்லும்போது, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கு செல்வதாகத் தெரிவித்தார்.  அங்கு செல்லவேண்டாம் ஏனெனில் பல கட்சிகள் இணைந்து வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறுவதால், அங்கு வாக்குவாதங்கள் இடம்பெறும். அதனால் சுகவீனமுற்றிருக்கும் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம்  என நான் அவருக்கு கூறினேன் என்றாலும் அவர் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார்.

என்றாலும் அந்த கலந்துரையாடலின்போது ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால்  அவர் பாரிய மன அழுத்தத்துக்கு, மன வேதனைக்கு ஆளாகி இருந்தார்.  அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்தமையால், அந்த கலந்துரையாடலில் அவருக்கு எதிராக பேசப்பட்ட விடயங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. அதனால் அவர் அந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியேறி என்னை தொடர்புகொண்டு இடம்பெற்ற விடயங்களைத் தெரிவித்தார். என்றாலும் அவருக்கு நான் ஆறுதல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று ஓய்வாக இருக்குமாறு தெரிவித்தேன். பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.

அதனால் அவரின் மரணம் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறாமை மிகவும் பேரழிவாகவே நான் கருதுகிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.