மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!
மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தானங்களிலே சிறந்த தானம் இரத்த தானம். உடல் பாகங்களை தானம் செய்வது கண் தானம் செய்வது போன்ற பல்வேறு தானங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
வடக்கு மாகாணத்திலே யுத்த காலத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம். யுத்த காலத்தில் இரத்தம் என்பது உயிர் காக்கும் ஒரு விடயமாகக் காணப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் நான் அரசாங்க அதிபராக இருந்தபோது யுத்தம் மற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதில் நாங்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கி இருந்தோம்.
அக் காலத்தில் இரத்ததான விழிப்புணர்வை பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொண்டு இரத்த வங்கி மூலம் செயல்படுத்தி தான் பல உயிர்களை காப்பாற்றி இருந்தோம்.
எனவே இரத்த தானம் என்பது ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும்.
அந்தவகையில் சமூகப் பொறுப்பினை தாமாகவே உணர்ந்து செயற்பட்ட இரத்த கொடையாளர்கள் இன்றைய தினம் கௌரவிக்கப்படுகின்றார்கள்.
எனவே இதே போல பல குருதிக்கொடையாளர்கள் எதிர்வரும் காலத்தில் உருவாக வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை