13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்! சில தமிழ் தலைவர்களே முட்டுக்கட்டை என்கிறார் டக்ளஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13 ஆம் அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள போதிலும் , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாகவே காணப்பட வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது , ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் –

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் விஜயத்தின் போது அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அதிகார பரவலாக்கம் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் :  ஒரு கால கட்டத்தில் இலங்கையில் பிரச்சினைகள் காணப்பட்டன. அந்தப் பிரச்சிகளுக்குத் தீர்வு கோரி ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்கள் , அதன் ஊடாக தீர்வைப் பெற முடியாது என ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதற்கமையவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக அன்றிருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு முழுமையான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் காணப்படுகின்றன. 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும். எனினும் இதற்காக ஜனாதிபதி மாத்திரம் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதாது. தமிழ் மக்கள் தரப்பில் அவர்களின் பிரதிநிதிகள் உண்மையுடன் முன்வர வேண்டும்.

கேள்வி : 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் , காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும் மத்திய அரசாங்கம் அவற்றை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தோன்றவில்லையே?

பதில் : இருப்பதிலிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்ல முடியும். தேசிய நல்லிணக்கத்துக்கு ஊடாகவும் , நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முரணான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு மக்கள் சாதகமான கோணத்தில் பார்க்கின்றனரா? இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முரண்பாடான கருத்துக்களையல்லவா முன்வைத்துக் கொண்டிருக்கின்றன?

பதில் : எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அந்த வகையில் சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகின்றேன். இதற்கான சிறந்த அறிகுறிகளாக காணிப்பிரச்சினை , அரசியல் கைதிகள் எனக் கூறப்படுகின்றவர்களின் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாகவே வைத்திருக்க வேண்டும் என எண்ணும் அரசியல்வாதிகளே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி : வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் எந்த அடிப்படையில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : இந்தப் பிரச்சினைக்கு 1987 இல் தீர்வு வழங்கப்பட்டது. எனினும் அன்றிருந்தவர்கள் அதனை நிராகரித்ததோடு , மறுபுறம் அதனை முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டனர். நாடு; எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் அதே வேளை , இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.