இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல்
இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும்.
இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட போது 30 மில்லியன் இலாபமீட்டியது. அதன் பின்னர் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்திடம் விமான சேவையொன்று உள்ளது என்பதை ஒரு வெற்றியாகக் கருதுகின்றோம். ஆனால் அந்த காரணத்துக்காக அதிகளவான பணம் செலவிடப்படுகிறது. இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது.
எனவே தான் அதனை மறுசீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அரசாங்கத்திடம் 51 சதவீத பங்குகளும் , ஏனைய தனியார் முதலீட்டாளர்களிடம் 49 சதவீத பங்குகளும் காணப்படும் வகையில் இந்த மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எமது சட்டத்துக்கமைய விமான சேவையில் 49 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை வெளிநாட்டு தனியார் துறைக்கு வழங்க முடியாது. ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியும்.
இந்த மறுசீரமைப்பை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை உலக வங்கியின் கீழ் இயங்கும் நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே விலைமனு கோரல் ஆவணம் தயாரிக்கப்படும். எவ்வாறிருப்பினும் தற்போது நிலைமை ஓரளவுக்கு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது இலங்கைக்கு விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இஸ்ரேல் சிவில் விமான சேவைகள் குழுவொன்று நாட்டுக்கு விஜயம் செய்துள்ளது.
அதேபோன்று ஈரான், ஷீஷெல்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து நேரடியாக விமான சேவையை முன்னெடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பங்களாதேசுக்கு துறைமுகத்தில் ஒரு பகுதியை விற்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். எவ்வாறிருப்பினும் பங்களாதேஷ் ஏதேனுமொரு முனையத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினால் அதற்கான வாய்ப்பினை வழங்க தயாராகவே உள்ளோம்.
மறுசீரமைப்புக்கள் தாமதமடைந்துள்ளமை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும்.
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 9.5 பில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனையும் , மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை