சீனாவின் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது மக்களை அணிதிரட்டி போராடத் தயங்கோம்! ஜனநாயக போராளிகள் கட்சி போர்க்கொடி
வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத் தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கதிர் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் –
யுத்தத்தின் பின்னர் தமிழர் நிலப்பகுதிகள் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
மகாவலி என்ற போர்வையில் முல்லைத்தீவு மாவட்டம் ஆக்கிரமிப்புக்குள்ளாகிய உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன தமிழர் நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், வவுனியா மாவட்டத்தில் சீனாவின் ஆதரவோடு தமிழர்களின் பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்தி சீனித் தொழிற்சாலை அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அறியக் கிடைக்கிறது.
எமது பாரம்பரிய நிலங்களை வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ தாரை வார்க்க முடியாது.
வவுனியா சீனித் தொழிற்சாலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் மௌனம் காத்து வருகின்ற நிலையில் நாம் பொறுமை காக்க மாட்டோம்.
குறித்த சீனித் தொழிற்சாலை அமைப்பதற்கான காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரச உயர் மட்டங்களில் பேசப்பட்டுவிட்டது.
ஆகவே, சீனி தொழிற்சாலைக்கான காணிகளை வழங்குவதற்கான உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடும் வரை காத்திருக்கிறோம். வெளியிடப்பட்டதும் மக்களை அணி திரட்டி போராடுவோம் என அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை