டயகம நகரில் புதிதாக முளைக்கும் மதுபானசாலை ; பொங்கியெழுந்த பொதுமக்கள்!
டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான்காவதாக ஒரு மதுபானசாலை ஆரம்பிக்கப்படுவது அநாவசியமான ஒன்று என்றும் இது, பிரதேச மக்களை பள்ளத்தில் தள்ளுவதற்கான செயற்திட்டம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கருப்புக் கொடி கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி பொது மக்களும் மாணவர்களும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் மதுபானசாலைகள் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டயகம நகரில் 200 மீற்றருக்கு ஒரு மதுபானசாலை அமைக்கப்படுவது குறித்து பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வீதியோரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மதுபானசாலைக்கு அருகில் லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. அதில் 200க்கும் அதிகமானோர் வசித்து வரும் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களும் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிலையில், மதுபானசாலை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்துமாறு அங்குள்ள பொதுமக்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டம் நேற்று மதியம் டயகம நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மேற்கு 3ஆம் பிரிவில் இருக்கும் வைத்தியசாலை வரை சென்று, மீண்டும் நகரத்தை வந்தடைந்தது.
இப்போராட்டத்தில் மத குருமார், இளைஞர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், வர்த்தகர்கள் என பலரும் இணைந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை