அரசு என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் பந்துல குணவர்தன தெரிவிப்பு
மே 09 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரசியல் வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்துள்ளோம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார்கள்.
ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றினார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஒருபோதும் உண்மையாகி விடாது.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காக அரசியல் கொள்கைகளை புறக்கணித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.நாடு என்ற ரீதியில் பாரிய சவால்களை வெற்றிகொண்டுள்ளோம். தேசிய கடன் மறுசீரமைப்பு சிறந்த ஆரம்பமாகும்.
தேசிய கடன் மறுசீரமைப்பு எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. சர்வதேச நிதி மற்றும் நீதி நிறுவனங்களின் ஆலோசனைகளுடன் வெளிநாட்டு அரசமுறை கடன்களும் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும். பொருளாதாரம் ஸ்தீரமடைந்ததன் பின்னர் அவரவர் தமக்கு ஏற்றாற் போல் அரசியல் செய்துகொள்ளலாம்.
பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி கடந்த ஆண்டு மிலேட்சத்தனமான சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றன. கடந்த ஆண்டு மே 09 ஆம் திகதி காலி முகத்திடல் வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி ஒருவர் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். 70 இற்கும் அதிகமான அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த பயங்கரவாதச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை