மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க புதிய வேலைத்திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு  தற்போது முன்னெடுத்து வருகின்றதென  சுகாதார  அமைச்சர்   கெஹெலிய  ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களின்  பெறுகை  செயற்பாடுகளை  செயல்திறன் மிக்கதாக  முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைய மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம்  செலுத்த தீர்மானித்திருப்பதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார  அமைச்சர்   கெஹெலிய  ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த  சுகாதார  அமைச்சர்   கெஹெலிய  ரம்புக்வெல்ல,

இலங்கையின் மருத்துவத்துறை பற்றிய அவதானம் தற்காலத்தில் மேம்பட்டுக் காணப்படுவதாகவும் உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் இலங்கையின் வைத்தியத்துறைக்கான அர்பணிப்புக்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் காணப்படும் மருத்துவத்துறை தொடர்பிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகள் இலவச மருத்துவத்துறையின் எதிர்காலத்தில் எவ்வகையில் தாக்கம் செலுத்தும் என்பது பற்றியும் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக முழு உலகத்தினதும் சுகாதாரச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதெனவும்,  கொவிட் தடுப்பூசிகளுக்காக இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 60 மில்லியன்களை செலுத்தியிருப்பதாகவும்  தெரிவித்த அமைச்சர். இந்தியாவிலும் கொவிட் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்ததன் விளைவாக மருந்து தயாரிப்பு நிறுவனம் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அதனால் “சீரம்” நிறுவனம் இந்தியாவிலிருந்தே செல்ல வேண்டிய நிலைமை உருவாகியிருந்தாகவும் தெரிவித்தார்.

அதனால், செலுத்திய பணத்திற்கு ஊசிகளும் கிடைக்கவில்லை. பணத்தையும் மீளப்பெறமுடியாமல் போய்விட்டது எனவும். அன்று முதல் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே முன்னோக்கிச் செல்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக மருத்துவ விநியோகத்துறைக்கு ஒரு வருடத்திற்கு அவசியமான பொருட்கள் முன்கூட்டியே கோரப்படும் என்பதோடு, ஒரு வருடத்திற்கு அவசியமான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் இயலுமையும் காணப்பட்டது. அக்காலத்தில் நிதி நெருக்கடியும் காணப்படவில்லை.  கொவிட் பரவல் காரணமாக விமான மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகள் தடைப்பட்டமையினால் நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பொருட்கள் பரிமாற்றச் செயற்பாடுகளும் முடங்கின. அந்த நேரத்தில் கொவிட் கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினால் மருந்து பொருட்களை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் மீது அவதானம் செலுத்த முடியாமல் போயிருந்ததெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் பரவலில் இருந்து மீண்டு நாடு ஓரளவு சுமூகமான நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் பெரும் ஆரப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் முழு நாடு சில்லான நிலைமையை எதிர்கொண்டிருந்தது. அதனால் பெறுகைச் செயற்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டன. மருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் 9 மாதங்களை செலவிட வேண்டிய நிலைமை உருவாகியிருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவையில் விளக்கமளித்த பின்னர் நிலைமையை சரியான முறையில் விளங்கிக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து மருந்து கொள்வனவுக்கு அவசியமான வேலைத்திட்டம் ஒன்றை பரிந்துரைத்தார். அதனால் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் மருந்து தட்டுப்பாடு தொடர்பிலான நிலையை சீரமைக்க முடிந்துள்ளது. எவ்வாறாயினும் நிலைமைகளை சீரமைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையொன்று சுகாதார அமைச்சினால் அமைச்சரவைக்குச் சமர்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 19 புதிய மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. அடுத்த காலண்டில் இன்னும் 17 மருந்துகளின் உற்பத்தி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படும். அதன் பின்னரான இரு வருடங்களில் 30% – 35% சதவீதம் வரையிலான மருந்துப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்திச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கேள்வி –  2021 ஆம் ஆண்டில் பல மில்லியன்கள் செலவில்  ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ விநயோகத்துறையின் தகவல் கட்டமைப்பு  முடங்கிப்போயுள்ளது. தற்போது  100 மில்லியன்கள் செலவில் அதனை மீள ஆரம்பிக்கப்படுவதற்கான அவசியம் யாது ?

பதில் –  மேற்படி  தகவல் கட்டமைப்பானது  Delete Button அமத்தப்பட்டதால்  முழுமையாக அழிந்துப்போய்விட்டது என்ற காரணத்தை  ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அது பற்றிய விசாரணை நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அது தொடர்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பாராளுமன்றத்தின் கோப் குழுவும் அதுபற்றி அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பில் அவசியமான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்வதற்கு பின்வாங்கப்போவதில்லை.

கேள்வி – மயக்க மருந்து தொடர்பிலான பிரச்சினைகளை பேராதனை மற்றும் றாகமை வைத்தியசாலைகளில் காண முடிந்தது. அது தொடர்பிலான குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆராயப்படுவதாக கூறப்பட்டது. அதன் தற்போதைய நிலைமை யாது?

பதில் – இது தொடர்பில் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை தொடர்பாக பேராதனை சிறுவர் வைத்தியசாலை மற்றும் றாகமை போதனா வைத்தியசாலை பிரதான வைத்தியர்களினால் தெளிப்படுத்தல்கள் வழங்கப்பட்டன.

பேராதனை வைத்தியசாலையில் மேற்படி ஊசியை பயன்படுத்தவில்லை என்பதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.  அது தொடர்பிலான முதற்கட்ட அறிக்கையும் கிடைத்துள்ளது. றாகமை வைத்தியசாலை தொடர்பிலான அறிக்கையும் எதிர்வரும் நாட்களில் கிடைக்கும்.  பிரச்சினைக்குரிய மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கேள்வி – NMR நாட்டிற்கு கொண்டுவரப்படும் மருந்துகளை பரிசோதிப்பதற்கான பணிக்குழுவும் ஆய்வுக்கூட வசதிகளும் போதியளவில் இல்லை என பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார். அவ்வாறாயின் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் மருந்துகள் பரிசோதனை செய்யப்படாமல் மக்களுக்கு வழங்கப்படுகின்றனவா?  இல்லாவிட்டால் அதிகாரிகள் பற்றாக்குறையா? ஆய்வுக்கூட வசதிகள் போதாமைக்கான காரணம் என்னவென கண்காணிக்கப்படவில்லையா?

பதில் – ஆய்வுக்கூட வசதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தற்போதும் உலக சுகாதார ஸ்தானபத்துடன் கலந்தாலோசித்து  நிபுணர்களின் ஆலோசணைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  மறுமுனையில் அரச மற்றும் தனியார்துறை இணைந்த வேலைத்திட்டம் பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இவ்வருட இறுதிக்குள் ஆய்வுக்கூட வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான அறிவுரைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.