தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனிதப் படுகொலையில் அரசு ஈடுபடுகிறது! வைத்தியர் காவிந்த ஜயவர்தன விசனம்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனித படுகொலை செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது. நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்துக்கள் பொறுப்பற்றனவாக உள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு   விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் வைத்தியர்கள், தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்து உட்பட மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நாளாந்தம் தீவிரமடைந்து செல்கிறது.

அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருள்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் தனியார் மருந்தகங்களை நாடுகிறார்கள். மருந்துத் தட்டுப்பாடு, மருந்துகளின் விலையேற்றம் ஆகிய காரணிகளால் பொது மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான பின்னணியில் தரமற்ற மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தரமற்ற மருந்து பாவனையால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளார்கள். இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சு, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை பொறுப்புக் கூற வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மருந்து இறக்குமதியாளர்களுக்கு மருந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்காமல் புதிய இறக்குமதியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரத்துடன் அரசாங்கத்துக்கு இணக்கமான  ஒருவரின் தங்கையின் மகன் தொடர்புப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆகவே தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

தரமற்ற மருந்துகள் ஏதும் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்பாவி மக்களைக் கொலை செய்யும் செயற்பாடுகளுக்கு இணையான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.