அரசின் நிகழ்ச்சிநிரலில் செயற்படும் சபாநாயகர் தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட வேண்டும்! எஸ்.எம்.மரிக்கார் காட்டம்
ரணில் விக்கிரமசிங்க யார் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாத மொட்டு கட்சியினரே அவரை ஆதரிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
அத்துடன் சபாநாயகரின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –
மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையை மக்கள் முன் வெளிப்படுத்தியவர் தான் என்றே அமைச்சர் பந்துல குணவர்தன தேர்தலில் போட்டியிட்டார். ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க நாங்கள் பைத்தியங்கள் அல்லர் என்று ரோஹித அபேகுணவர்தன கூறியதுமையுடன் ரணில் சிறைக்கு செல்லும் நாளில்தான் நான் உறங்குவேன் என்று கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரே கடன் மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரிக்கின்றனர்.
இவர்கள் எப்படி நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றனர். ரணில் விக்ரமசிங்கவை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது. நாங்கள் நன்கு அவரைப் பற்றி அறிந்துள்ளோம். கடன் பெறவும் விற்கவுமே அவருக்குத் தெரியும். இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு சட்டம் எவ்வளவு சிக்கலானது என்று நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு விவாதத்தின் இறுதியில் சபாநாயகர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் தீர்மானித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க இடமளிக்காமல் சபை நடவடிக்கையை நிறைவுக்கு க் கொண்டுவந்தார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு மாற்றமாகவே சபாநாயகர் செயற்பட்டார். அதனால் சபாநாயகரின் இந்த நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை