முல்லை குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துக! சிறிதரன் அரசுக்கு சவால்
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ”கல்வெட்டு” எனத் தொல்லியல் திணைக்களத்தால் ஆதாரமாக காட்டப்படும் ”செங்கல்” எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் பல விடயங்களைக் கூறியமையுடன் அந்த ”கல்வெட்டு” உண்மையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்றால் யுனெஸ்கோவையும் சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்களையும் அழைத்து ஆய்வு செய்ய அரசு தயாரா எனவும் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
இலங்கையில் தமிழர்களும் தேசிய இனம் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் அடையாளத்தையும் மத, உரிமைகளையும் மதிக்கிறோம்.
எமது உரிமைகளையும் அடையாளங்களையும் அழித்து சிங்கள இனத்தை மேம்படுத்த தமிழர்களின் தொன்மையை அழித்து பௌத்த மயமாக்கலை விரிவுப்படுத்துவது முறையற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்படும் விகாரை பகுதிக்கு நேரடியாக சென்று நீதியரசர் பார்வையிட்டுள்ளார். அங்கிருந்த ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு அங்கு புதிய கல்வெட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கு எவ்வாறு இவ்வாறு கல்வெட்டு வந்தது? புத்தர் விகாரை அமைக்க முன்னர் நானும் சார்ள்ஸ் நிர்மலநாதனும் குருந்தூர் மலை பகுதிக்கு சென்றிருந்தோம். ஆலயங்கள் உடைக்கப்பட்டதை எமது கண்களால் கண்டோம். இவ்வாறான நிலையில் புதிய கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
சீமெந்து கற்களை அறுத்து அதன் மேல் செங்கல் துகள்களை பூசி அதனை புராதன கல்வெட்டாக மாற்றியுள்ளனர். இவ்வாறு செய்து விட்டு இது ஒரு பழைய செங்கல், அது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் என கதை பரப்புகின்றனர்.
இது அப்பட்டமான பொய். அங்கே அறுக்கப்பட்ட தூண்களை நாம் எமது கண்களால் கண்டோம். சீமெந்து கற்களை கிரவலுக்கு மேலே அறுத்து அந்தக்கிரவலை பழைய கல்லுப்போல் காட்டி அங்கேயுள்ள பாசித்தண்ணியை ஊற்றி அதனை ஒரு பழைய தொல்பொருள் விகாரை போல் காட்டும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களமும் படைகளும் அரசும் போலி வேலையை செய்தன என்பதை இந்த உயரிய சபையில் நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
நாங்கள் குறிப்பிடுவது பொய் என்றால் – அந்த கல்வெட்டு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்றால் – யுனெஸ்கோவை சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்களை அழைத்து ஆய்வு செய்வதற்கு நீங்கள் தயாரா? அவர்கள் வந்து ஆய்வு செய்து நீதியைச் சொல்லட்டும்.
பண்பாட்டு, கலாசாரம் மற்றும் மத ரீதியில் நாம் தொடர்ச்சியாக அழிக்கப்படுகிறோம்.ஆகவே, சர்வதேச அமைப்புக்கள், மனச்சாட்சி உள்ள நிறுவனங்கள் எமக்காக கண் திறக்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வேண்டுகோளாக விடுக்கின்றேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை