திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறவும் புதிய சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும்! ஹக்கீம் வலியுறுத்து

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவருவது போல் திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ளவும் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்.

அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராயவும் இதனுடன் விசேட ஏற்பாடாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாட்டில் உள்ள ஊழல் மோசடிகளை நீக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்திருக்கிறது. என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக்குள் எமது நாடு ஆசிய நாடுகளிலேயே முதலாவது நாடாக இடம் பிடித்திருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையிலும்கூட எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார குற்றச்செயல்கள் தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு கூறி இருந்தார்கள்.

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கைக்கு தெரிவித்திருந்தது.

அதனால் ஊழல் மோசடி குற்றச்செயல்கள் தொடர்பாக எமது நாடு பெயர் பெற்றுள்ளது. அதனால் சொத்துக்கள் மற்றும் பிரகடனங்கள் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த ஊழல் எதிர்ப்பு புதிய சட்டமூலத்தை கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறைகளில் ஏற்படும் ஊழல் மோசடிகள் விளையாட்டுத்துறையில் ஏற்படும் மோசடிகள் மற்றும் பாலியல் இலஞ்சம் அதேபோன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் போது ஏற்படும் மோசடி போன்ற பல புதிய விடயங்கள் இதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று நாங்கள் திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வதற்கானதொரு சட்டமூலத்தையும் கொண்டுவர வேண்டும். இந்த சட்டமூலத்தின் பின்னர் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்களும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த வருடம் மார்ச் வரை அதற்கான காலம் இருக்கிறது. அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

எனவே, திருடப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமான ஒரு சட்டமூலம் விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும். சட்ட ரீதியில் அதனை திருப்திகரமான முறையில் மீட்க முடியுமான ஒரு நடவடிக்கையை நாங்கள் கையாள வேண்டும். எமது நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்க ,இது மிகவும் முக்கியமானதாகும். அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக ஆராயவும் இதனுடன் விசேட ஏற்பாடாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். என்றாலும் இது தொடர்பாக எமக்கு இன்னும் பதில் வழங்கப்பட வில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.