வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் கருத்து தொடர்பில் மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் கடும் விமர்சனம்!
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் விளைவாக ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பாக அண்மையில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், எவ்வித அடிப்படைகளும் அற்றவை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமது அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின்படி, உள்ளகக் கடன்மறுசீரமைப்பை விடுத்து 30 சதவீத வருமானவரி செலுத்துகையைத் தெரிவுசெய்வதே ஊழியர் சேமலாப நிதியம் போன்ற நிதியங்களுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் பெரிதும் நன்மையளிக்கும் என்று பிரபல பொருளியல் ஆய்வு அமைப்பான வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி தற்போது முன்மொழியப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரகாரம், பிணையங்களுக்கான கொடுப்பனவாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியில் பெருமளவு கழிப்பனவுகள் இடம்பெறும் என்றும், அது எதிர்வரும் 2038 ஆம் ஆண்டு வரையான 16 வருடகாலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 12 ட்ரில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஆளுநர் –
மேற்குறிப்பிட்டவாறான கருத்து முற்றிலும் தவறானது என்றும், அக்கருத்துக்கு அடிப்படையாக அமைந்த ஆய்வு சரியான தரவுகளின் அடிப்படையில், உண்மையான பெறுபேறை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அல்ல என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வு விடயம் தொடர்பில் தெளிவற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது அல்லது மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், 2038 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பதிவாகக்கூடிய பணவீக்கம் எவ்வாறு கணிப்பிடப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தம்மால் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கப்படக்கூடிய பிணையங்களுக்கான வட்டிவீதம் நிர்ணயிக்கப்படுவதால், அதில் குறிப்பிட்டவொரு தாக்கம் ஏற்படும் என்பதை தாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு தாக்கமும் ஏற்படக்கூடாது என்றால் எதனையும் செய்யாமல்தான் இருக்கவேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை