கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிகள் அகழ்வு எதேச்சதிகாரமாக இடம்பெறுகிறது! சுமந்திரன் காட்டம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

இந்த அகழ்வுப் பணிகள் ஒரு குறித்த முறைப்படி செய்வதாகத் தெரியவில்லை.

சர்வதேச ரீதியிலே இந்த அகழ்வுப் பணிகள் எப்படியாகச் செய்யப்படவேண்டும்  என்பதற்குப் பல நியதிகள் உள்ளன. அந்த நியதிகள் எவையும் இங்கு பின்பற்றப்படுகின்றன எனத் தெரியவில்லை. இந்த அகழ்வுப்பணிகள் எதேச்சதிகாரமாகச் செய்யப்படுகின்றன.

வைத்தியர் இங்கே இருந்தாலும்கூட, சாதாரணமாக ஒரு புதைகுழியிலே ஒரு மனித உடலைத் தோண்டி எடுத்து செய்யப்படுகின்ற பரிசோதனைக்கும், இப்படியாகப் பல உடல்கள் மனிதப் புதைகுழியாக இருக்கின்ற பகுதி தோண்டப்பட்டு எடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இதைச் செய்வதற்கான சர்வதேச நியதிகள் ஏராளமாக இருக்கின்றன. அந்த நியதிகளைப் பின்பற்றியே இந்த அகழ்வுப்பணிளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே அப்படியாக அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

கடந்த 05.07.2023 அன்று மன்னார் நீதிமன்றிலும், மன்னாரில் இனங்காணப்பட்ட புதைகுழி தொடர்பிலான வழக்கு மீளவும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த எல்லா விடயங்களிலேயும் திருப்திகரமான முறையிலே இந்த அகழ்வுகள் இடம்பெறுகின்றன எனத் தெரியவில்லை.

இது இந்த நாட்டிலே பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு சூழ் நிலையிலே, இவ்வாறான சாட்சியங்கள் கிடைக்கிறபோது, அவை மிகவும் கவனமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலே விசாரிக்கப்பட்டு, அகழ்வுகள் செய்யப்படவேண்டும்.

ஆனால், இப்படியாக எதேச்சதிகாரமாகச் செய்வதும், அகழ்வுப்பணிகள் இடம்பெறுகின்ற இடங்களில் அகழ்வுப்பணிகளில் ஈடுபடுபவர்கள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சிலவேளைகளில் நீதிவான்கள்கூட இடமாற்றம் செய்யப்படுகின்றார்கள்.

ஆகையாலேயே இதிலேயிருந்து உண்மையைக் கண்டறிவதற்கு அரசிற்கு முழுமையான மனதில்லாமல் இருப்பதும், இன்னொருபடி மேலே சொன்னால் இவற்றை எல்லாம் மூடி மறைப்பதும்தான் அரசுடைய நோக்கமாக இருப்பது புலனாகிறது.

குறிப்பாக இந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகின்ற சான்றுப் பொருள்கள்கூட கவனமாகப் பேணிப் பாதுகாக்கப்படவில்லை. அதனை இங்கே நேரடியாக எம்மால் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

எடுக்கப்பட்ட சான்றுப்பொருள்கள் பாதுகாப்பின்றி, பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எவரும் எடுத்துக்கொண்டு போகக்கூடிய வகையிலேயே குறித்த சான்றுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை அதானிக்கக்கூடியதாகவிருந்தது.

அதேவேளை, இந்த இடத்தை எவ்வாறாகப் பாதுகாப்பாக வைத்திருக்கப்போகின்றார்கள் என்பதிலும் கேள்விகள் இருக்கின்றன.

இந்த அகழ்வுப்பணிகளை இடைநிறுத்தி இன்னொரு நாளில் அகழ்வுப்பணிகளைச் செய்வதாகவிருந்தால் என்னவிதமாக இந்த இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கப்போகின்றார்கள்.

பொலிஸாரின் கைகளில் இந்த இடத்தை விடப்போகின்றார்களா, இது வேலியே பயிரை மேய்கின்ற கதையாக அமைந்துவிடக்கூடாது.

புலனாய்வாளர்கள் ஏராளமாக இங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றனர். பல புலனாய்வாளர்கள் இங்கே புகைப்படங்கள் எடுப்பதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

ஆகவே புவனாய்வாளர்கள் இங்கு வந்து, இங்கேயிருந்து யார் என்ன செய்கின்றார்கள் என்ற தகவல்களை கிரமமாக அனுப்பிக்கொண்டிருக்க, இந்த விடயங்களை மறைக்க நினைக்கிறவர்கள் அடுத்த நடவடிக்கைக்கு தயாராவார்கள்.

ஆகையாலே இது சரியான விதத்திலே பாதுகாக்கப்படவேண்டும். சரியான முறையிலே, சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலே இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும்.

அதற்கான சர்வதேச நிபுணத்துவம், மேற்பார்வை உடனடியாகக் கொண்டுவரப்படவேண்டும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.