மலையகத்தின் எதிர்கால மூலதனமான கல்வித்துறையில் ஊழலை திணிக்காதீர்! வேலுகுமார் தெரிவிப்பு
மத்திய மாகாணத்தின் கல்வி நிலை பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு அரசாங்கம் சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மலையக இளைஞர்களின் எதிர்கால மூலதனம் கல்வி ஆகவே அதிலும் ஊழலைத் திணிக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
காலத்துக்குத் தேவையான வகையில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாட்டின் பொருளாதார நிலை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். ஊழல் மோசடி இதன் பின்னணியாக காணப்பட்டது.
நாட்டின் சகல துறைகளிலும் ஊழல் மோசடி காணப்படுகிறது.பிறப்பு முதல் இறப்பு வரை சகல நடவடிக்கைகளிலும் இலஞ்ச ஊழல் காணப்படுகிறது.
இலவச கல்வி மற்றும் மருத்துவ துறையிலும் ஊழல் வேறூன்றியுள்ளது. ஊழல் இல்லாதொழிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இயற்றப்படும் சட்டம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மத்திய மாகாணத்தில் கல்வி நிலை கடந்த காலங்களில் அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்
மத்திய மாகாணத்தில் அதிக தோட்டப் பாடசாலைகள் காணப்படுகின்றன. தோட்ட பாடசாலைகளின் நலன் தொடர்பில் ஆராய மத்திய மாகாணத்தில் மேலதிக கல்வி பணிப்பாளர் பதவி ஒன்று காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த பதவி நீக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் மேலதிக கல்வி பணிப்பாளர்களாக பதவி வகித்தவர்கள் அரசியல் கட்சிகளின் கையாள்களாக செயற்பட்டுள்ளார்கள்.
இதன் காரணமாகவே தற்போது அந்த பதவி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபை ஒன்று இல்லாத நிலையில் எவ்வாறு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் என்ற பதவி நிலையை நீக்க முடியும். இதில் உள்ள அரசியல் என்ன, இனவாதம் என்ன என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள 133 பாடசாலைகளில் 115 பாடசாலைகள் தமிழ் மொழி மூலமானவை, நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள 158 பாடசாலைகளில் 123 பாடசாலைகள் தமிழ் மொழி மூலமானவை.
ஹட்டன் கல்வி வலயத்துக்குரிய பணிப்பாளர் தொடர்ச்சியாக மலையக சமூகத்தில் இருந்து உரிய கல்வி தகைமையுடன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அங்கு உள்ள அரசியல்வாதிகளின் தலையீட்டினால் ஊழல் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு இன்று நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்தில் தமிழர் ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்படுவது தொடர்ந்து தடைப்பட்டு வருகிறது. அதற்கு ஆளும் தரப்பில் உள்ள அரசியல் கட்சியின் செயற்பாடு பிரதானவையாக காணப்படுகிறது. இதனை மாகாண சபைக்கு உரிய விவகாரம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் புறக்கணிக்க கூடாது. மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் விவகாரம் மற்றும் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளர் நியமனம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக் வேண்டும். மலையக இளைஞர்களின் எதிர்கால மூலதனம் கல்வி ஆகவே கல்வியிலும் ஊழலை திணிக்காதீர்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை