கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவும் முகாமைத்துவசபை சந்திப்பும்!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை வலய, கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலக திறப்புவிழாவும் முகாமைத்துவ சபை சந்திப்பும் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, தனது 75 ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடவுள்ள கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கத்தின் பாவனைக்காக அலுவலகம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வும், பழைய மாணவர் சங்கத்துக்கு நடப்பாண்டுக்காக சட்ட ஆலோசகர், கணக்காய்வாளர் மற்றும் ஊடக இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்குதல், பாடசாலை முகாமைத்துவ சபையுடனான கலந்துரையாடல் என்பன 2023.07.07 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில், பாடசாலையின் முதல்வரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான் எம்.ஐ.ஜாபீர் தலைமையில் இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக பாடசாலை முதல்வர் தலைமையில் அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் காரியப்பர் மண்டபத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றன. பாடசாலை முதல்வர் எம்.ஐ.ஜாபீர், கல்வி செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் உட்கட்டமைப்பு தேவைகள் முன்னெடுப்புகள் தொடர்பில் தனது தலைமை உரையை நிகழ்த்தினார். இங்கு சட்ட ஆலோசகராக எம்.எஸ்.ஏ. சாரிக் காரியப்பர், கணக்காய்வாளர் ஏ.நிசாப்தீன் மற்றும் ஊடக இணைப்பாளர்களில் ஒருவரான எம்.வை.அமீர், எம்ஐ.எம். அஸ்ஹர் ஆகியோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டொக்டர் எம்.என்.எம்.தில்ஷான், முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பில் விரிவான கருத்துரை ஒன்றை வழங்கினார்.

பொறியலாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் மற்றும் பொறியலாளர் எம்.ஆர்.எம் பர்ஹான் ஆகியோர் பாடசாலை தொடர்பில் வெளியார்களின் பார்வை, தற்போதைய கல்விநிலை மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பில் விரிவான அத்துடன் ஒப்பீட்டு ரீதியான கருத்துக்களை முன்வைத்தனர். பழைய மாணவர் சங்க முகாமைத்துவ சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பாடசாலை முகாமைத்துவ சபை சார்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் முன்னெடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் நாட்டுக்கான பிரதிநிதி பாடசாலை அபிவிருத்திக்காக நிதியூட்டங்களைப் பெற அங்குள்ள நிதி வழங்குநர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் விரிவான கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஒன்றுகூடலின் போது பிரதி அதிபர், பாடசாலை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் எனப் பலர் பங்கு கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.