பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மைக்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம்! மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதாலேயே அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தைப் பொறுத்தமட்டில், தாம் உள்ளகக் கடன்வழங்குநர்களையும், சர்வதேச கடன்வழங்குனர்களையும் சமத்துவமான முறையில் கையாள்வதற்கு முயற்சித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அதனை முன்னிறுத்தியே வங்கித்துறை உள்ளிட்ட நிதியியல் துறையினருக்கு 30 – 36 சதவீதம் எனும் உயர்வான வரி வீதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஊழியர் சேமலாப நிதியம் போன்ற நிதியங்களைப் பொறுத்தமட்டில், அவற்றின் அங்கத்தவர்களின் எதிர்கால நன்மைகளைக் குறுகிய காலத்துக்கு மட்டுப்படுத்தக்கூடியவகையிலும், கடன்மறுசீரமைப்பின் சுமை அந்நிதிய அங்கத்தவர்களிடையே சமமான முறையில் பகிரப்படக்கூடியவகையிலுமான உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தைத் தாம் முன்மொழிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நாடு பொருளாதார நெருக்கடிக்கும், உயர் பணவீக்க நிலைமைக்கும் முகங்கொடுத்திருக்கும் வேளையில் வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களில் உள்ள பணவைப்பு, நிதியங்களில் உள்ள சேமிப்பு போன்ற நிதிச்சொத்துக்களின் உண்மையான பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சியால் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், இருப்பினும் இது குறித்தவொரு சொத்துக்கோ அல்லது நிதியத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தொடக்கத்தில் உள்ளகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளாமல், சர்வதேச கடன்மறுசீரமைப்பின் ஊடாக மாத்திரமே பொதுக்கடன்களின் உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், இருப்பினும் பொதுக்கடன் உறுதிப்பாட்டுக்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை