பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் நம்பிக்கை எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது உண்டு! நம்புகிறார் இந்திக அனுருத்த
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சியடைந்ததன் பின்னர் அரசியல் குறித்து அவதானம் செலுத்தலாம். எதிர்வரும் ஆண்டு தேசிய தேர்தல் இடம்பெறும் அப்போது கட்சி என்ற ரீதியில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவோம் என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
கந்தானை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
கட்சி என்ற ரீதியில் கடந்த ஆண்டு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தின் ஊடாக ஆட்சியமைக்க இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியது. ஜனநாயக போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.
இளைஞர்கள் பயங்கரவாதிகள் போல் செயற்படும் சூழலை மக்கள் விடுதலை முன்னணியினர் தோற்றுவித்தார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பாலும், மக்கள் விடுதலை முன்னணியாலும் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவை மதிப்பிட முடியாது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மே மாதம் நாட்டை விட்டு வெளியேறினார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய ராஜபக்ஷர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தை மறந்து விட்டு முறையற்ற வகையில் செயற்பட்டார்கள்.
எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது பெரும்பான்மை மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம்.
பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்குவோம்.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சியடைந்ததன் பின்னர் அரசியல் தொடர்பாக அவதானம் செலுத்தலாம். எதிர்வரும் ஆண்டு தேசிய தேர்தல் இடம்பெறும். அப்போது கட்சி என்ற ரீதியில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை