நிலையான சமாதானத்தை ஏற்படுத்த சட்ட கட்டமைப்பில் திருத்தம்வேண்டும் நீதி அமைச்சர் வலியுறுத்து

நாட்டில் இருக்கும் ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களுக்கு போதுமான திருப்தியில்லாவிட்டாலும் மத்தியஸ்த சபை ஆணைக்குழு தொடர்பில் மக்கள் திருப்பதியடையும் நிலை இருக்கிறது.

ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமையும் அரசியல் தலையீடுகள் இல்லாமையுமே இதற்குக் காரணமாகும்.

அத்துடன் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார்.

தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில் –

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச செயலாளர் மட்டத்தில் மத்தியஸ்த சபை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மத்தியஸ்த சபை ஊடாக பல்வேறு பிரச்சினைகள், பிணக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

சாதாரண விடயங்களுக்காக நீதிமன்றம் சென்று காலம் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே மத்தியஸ்த சபை அமைக்கப்பட்டிருக்கிறது.

மத்தியஸ்த சபை 1958 ஆம் ஆண்டே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் அதில் அரசியல் தலையீடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததால் அது இல்லாமலாக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் 1988 ஆம் ஆண்டு சட்ட ரீதியில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது. எந்த அரசியல் தலையீடும் இல்லாமலேயே தற்போது இந்த சபை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அரசியல் தலையீடுகளை இதில் மேற்கொள்ளலாம். என்றாலும் இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அதற்கு இடமளிப்பதில்லை.

மிகவும் நேர்மையான – சமூகத்தில் மதிப்புமிக்க – உறுப்பினர்களே மத்தியஸ்த ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகித்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது இருக்கும் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் திருப்தியான நிலையில் இல்லாவிட்டாலும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் திருப்தியடைந்து வருகின்றனர்.

மேலும் நாட்டில் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்தைக்கொண்டு நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. நாட்டில் நிலையான சமாதானம் நிலவாமல் நாடு அபிவிருத்தியடையப்போவதில்லை.

நாட்டுக்குத் தேவையான சட்டங்களை அமைப்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் நாங்களாகும் என்றாலும் தற்போதுள்ள சட்டம்  நாட்டை அபிவிருத்தி செய்யவோ நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவோ போதுமானதல்ல. அதனால் காலத்துக்கு தேவையான முறையில் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

சட்டத்தால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. அதேநேரம் சட்டம் இல்லாமலும் முடியாது. அத்துடன் புதிய ஆணைக்குழுக்களை அமைக்க இருக்கிறோம். மேலும் நீதிமன்றங்களில் அதிகரித்துவரும் வழக்கு விசாரணைகளை குறைத்துக்கொள்ளவே மத்தியஸ்த சபைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் அதனால் ஒரு தரப்பு அதிருப்தியுடனே திரும்பிச்செல்லும். அதனால் முடியுமானவரை இரு தரப்பையும் மத்தியஸ்தம் செய்யவே நடவடிக்கை எடுக்கவேண்டும். 2015 இல் இதற்காக அதிக கவனம் செலுத்தினோம்.  அந்தக் காலப்பகுதியில் நூற்றுக்கு 47 வீதமான பிரச்சினைகள் மத்தியஸ்தம் செய்யப்பட்டிருந்தன.

எனவே மத்தியஸ்த சபைகளை மேலும் பலப்படுத்தி, அதற்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்ட அமைப்பு போன்ற நிறுவனங்கள் எமக்கு  உதவி வருகின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.