நாட்டில் ஊடக அடக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன ஜனநாயக சீர்குலைவுக்கு அரச இயந்திரங்களும் பங்காளிகள் ஊடகவியலாளர் சரவணன் வேதளை
இந்த நாட்டில் ஊடகஅடக்குமுறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு, இங்கு ஜனநாயகச் சீர்குலைவு தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய அரச இயந்திரங்களான பொலிஸ், இராணுவத்தினர்கூட, ஊடக அடக்குமுறைச் செயற்பாட்டில் ஈடுபட்டு இந்த நாட்டின் ஜனநாயக சீர்குலைவிற்கு பாரிய பங்கு வகிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் கடந்த 14.07.2023 அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வைத்து பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடொன்றானைப் பதிவு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டினைப் பதிவுசெய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
கடந்த 14.07.2023 அன்று குருந்தூர்மலைக்கு ஓர் ஊடகவியலாளராக, செய்தி அறிக்கையிடலுக்காகச் சென்றிருந்தேன்.
அவ்வாறு செய்தி அறிக்கையிடல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தள்ளிவிட்டு, என்னை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூறியிருந்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நான் ஓர் ஊடகவியலாளர் என என்னை அறிமுகப்படுத்தியிருந்தபோதும் என்னை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு கூறி எனது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், அச்சுறுத்துகின்ற விதத்திலும் செயற்பட்டிருந்தார்.
இது தொடர்பிலே 17.07.2023 நான் வவுனியாவிலுள்ள மனிதஉரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளேன்.
அத்தோடு குறித்த முறைப்பாட்டில் எனது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, என்னை அச்சுறுத்துகின்ற விதத்தில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான விவரம் மற்றும், என்னை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்துகின்றபோது எடுக்கப்பட்ட காணொளி உள்ளிட்ட ஆதாரங்களையும் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
அத்தோடு இந்த ஊடக அச்சுறுத்தல் செயற்பாட்டை மேற்கொண்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவில் வழங்கிய எனது முறைப்பாட்டில், கோரிக்கையையும் முன்வைத்துள்ளேன்.
குறிப்பாக இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், தாக்கப்பட்டிருக்கின்றனர், அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இதனைவிட ஊடகவியலாளர்கள் பலர் இந்த நாட்டில் தமக்குள்ள அச்சுறுத்தல் நிலைமைகள் காரணமாக புலம்பெயர்ந்துள்ளமையையும் நாம் காண்கின்றோம்.
அத்தோடு கடந்த காலங்களில் ஊடகநிறுவனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பலவும் பதிவாகியுமிருந்தன.
அதேவேளை அண்மைய காலங்களில்கூட ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகிற சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறாக இந்த நாட்டிலே ஊடக அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. அவ்வாறு இந்த நாட்டில் இடம்பெறும் தொடர்ச்சியான ஊடக அடக்குமுறைச் செயற்பாடுகளின் ஒரு சம்பவமாகவே எனக்கு இடம்பெற்ற இந்த அச்சுறுத்தல் நிலையைக் காண்கிறேன்.
இந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்றது. ஊடகம் என்பது ஜனநாயத்தின் நான்காவது தூண் எனச் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்த நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறைக்கு அடக்குமுறைகள் பிரையோகிக்கப்படுகின்றன.
இவ்வாறாக இந்த நாட்டில் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இந்த நாட்டிலுள்ள பொலிஸார், இராணுவத்தினர் எனப்படுகின்ற அரச இயந்திரங்களாலும் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இவ்வாறான ஊடக அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கும், அதனால் ஏற்படக்கூடிய ஜனநாயகச் சீர்குலைவுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை