முன்னாள் எம்.பி. அலவியின் மறைவுக்கு ரிஷாத் அனுதாபம்!

 

குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அலவியின் மறைவு தனக்கு மிகவும் வேதனை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு –

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராகி வரலாற்றில் தடம்பதித்த அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அலவி, முஸ்லிம்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டார்.

பம்மண்ணவை பிறப்பிடமாகக் கொண்ட அவர், மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக பல்வேறு வழிகளில் பாடுபட்டவர். குருநாகல் மாவட்டத்தில் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான பல நல்ல பணிகளை மேற்கொண்டார். அத்துடன் சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு ஒரு பாலமாகச் செயற்பட்டார்.

1990 ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் குருநாகல் மாவட்டத்துக்கு வந்தபொழுது, அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட இன்னோரன்ன வசதிகளைச் செய்துகொடுத்து அம்மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

சமூகப் பற்றும் சமூகத்தின் மீது அதிக அக்கறையும் கொண்டு செயற்பட்ட அன்னார், தனது பதவிக் காலத்தில் மக்களுக்கு முடிந்த வரை சேவையாற்றினார். மக்கள் பணியை விரும்பிச் செய்த அவர் எந்நேரமும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுவார். மனிதநேயம் கொண்ட அன்னார், குருநாகல் மாவட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியல் முக்கியஸ்தர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவற்றை நிவர்த்தி செய்தவர்.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதில் ஆர்வங்காட்டியவர்.

நற்பண்பாளரான அல்ஹாஜ் அலவியின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு இழப்பை தாங்கக்கூடிய மனதைரியத்தையும் பொறுமையையும் வழங்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.